பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – தீபிகா உடுகம
தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி, மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
கடந்த தசாப்த காலங்களில் இச்சட்டத்தினூடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர், “நாம் தேசிய ரீதியில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் அவசியமாகும்.
மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பிரதான கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். பயங்கரவாத தடைச்சட்டம் நிலவிய உச்சகட்ட காலங்களில் நாட்டில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன தேசிய பாதுகாப்பு விடயத்தில் அக்கறை இருக்க வேண்டும். அதற்கான சட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் இறுக்கமான தன்மைகள் தடுக்கப்பட வேண்டும். ஆகவே தான் மாற்று சட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதில் வெற்றிடத்தை ஏற்படுத்த வேண்டும் என நாம்
கூறவில்லை. நீக்கப்படும் சட்டத்திற்கு பதிலாக தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் மாற்று சட்டம் ஒன்றினை கொண்டுவர வேண்டும். ஆனால் கடுமையான தன்மைகளை நீக்க வேண்டும். உதாரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரை 18 மாதங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாது தடுத்து வைக்க முடியும். அதேபோல் கைதுசெய்யப்பட்ட நபர் எந்த முறையிலும் மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்பட கூடாது. அவர் பயங்கரவாத சந்தேக நபராகவோ அல்லது மரண தண்டனை கைதியாகவோ இருக்கலாம். அது முக்கியம் இல்லை. மனித உரிமைகள் என்பது அனைவருக்கும் சமமானது.
உரிய விசாரணைகளும் இடம்பெற வேண்டும். அதற்கு மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டும். கடந்த யுத்த கால சூழலில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் மீது கடுமையான சித்திரவதைகள் இடம்பெற்றன என்பதை மறுக்க முடியாது. எனினும் இவற்றை தடுக்க வேண்டும். சித்திரவதைகள் என்பதை தவிர்த்து புலனாய்வு மூலமாகவும் மனநிலை சார் மருத்துவ மற்றும் தொழிநுட்ப முறைகளிலும் உண்மைகளை கண்டறிய முடியும். இதில் புலனாய்வு துறையினரது பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
உலக நாடுகளில் இவற்றை கையாண்டு வருகின்றனர். எமது நாட்டிலும் அதனை கையாள வேண்டும். சில நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன அவர்கள் ஆதிக்கத்தை தக்க வைக்க சித்திரவதைகளை கையாண்டு வருகின்றனர் என்ற காரணத்தினால் நாமும் மனித உரிமைகளை மீறவேண்டும் என்ற கருத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. கடந்த காலங்களில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. சித்திரவதைகள் இடம்பெற்றன. அதனை மூடி மறைக்க ஏனையோர் செய்கின்றனர் நாம் செய்தால் என்ன என்ற காரணியை கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது.
இதில் காலாவதியான சட்ட முறைமைகளை வைத்துக்கொண்டு இயங்க முடியாது. புதிய சட்டங்களை உருவாக்கி நடவடிக்கைகளை கையாள வேண்டும். புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்பதை அரசாங்கத்திற்கும் தெரிவித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.