`அம்மன் தாயி’ என்ற படத்தில் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் ‘பிக்பாஸ்’ ஜூலி நடித்துள்ளார். அத்துடன் கிறிஸ்தவரான ஜூலி இந்து பெண்ணாகவே மாறி, விரதம் இருந்துள்ளதாக பட இயக்குனர் கூறுகிறார். அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் உருவாகி வருகின்றது.
இது தொடர்பில் இயக்குனர் மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆகிய இருவரும் கூறுகையில்,
“அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார்? என்பதே கதை. கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாரியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார்? என்பதை படத்தில் ஒரு முக்கிய காட்சியாக வைத்து இருக்கிறோம்.
விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஆந்திர மாநிலம் பைரவக்கோனா என்ற இடத்தில், சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளோம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.” என்று கூறினார்.