கிளிநொச்சி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை மீது எழுபது உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரிடம் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
கிளிநொச்சி பனை தென்னை வள சங்கத்தில் பல கோடி ரூபாக்கள் மோசடி இடம்பெற்று 46ஃ1 விசாரணை இடம்பெற்று முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது எனவும், இதற்கு பொதுச் சபையும் காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, தற்போது சங்கத்தில் சர்வாதிகார நிர்வாக நடவடிக்கை மற்றும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுவருவதோடு, தொழிலாளர்களுக்கான சம்பளங்களும் கொடுக்கப்படாது காணப்படுகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக 14 கோடிக்கு மேல் வைப்பிலிடப்பட்டிருக்க வேண்டிய ஊழியர் கட்டாய சேமிப்பு நிதியில் இரண்டு கோடியே ஜம்பது இலட்சம் மட்டுமே வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு பத்தரை கோடி நிதிக்கு மேல் என்ன நடந்தது என்றே தெரியவில்லை, இதனைத் தவிர பேரிணையத்திற்கு செலுத்த வேண்டிய விபத்து நலத்திட்ட நிதி இரண்டு கோடி இதுவரை செலுத்தப்படவில்லை. மாவட்ட இணையத்திற்கு செலுத்த வேண்டிய 25 இதுவரை செலுத்தப்படவில்லை எனவும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் சங்கத்தின் இயக்குநர் சபையின் ஒன்பது உறுப்பினர்களில் ஆறு பேர் தங்களின் பதவிகளை இராஜினாமம் செய்துள்ள நிலையில் இயக்கநர் சபையும் அறுதி பெரும்பான்மையின்றி காணப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற கூட்டுறவு சங்கங்களில் தங்களுடைய பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கமே அதிக நிதி பலத்துடன், சிறந்த சங்கமாக செயற்பட்டு வந்தது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக மிக மோசமான நிர்வாக நடவடிக்கையினால் சங்கம் என்றுமில்லாத அளவுக்கு பின்டைவுக்குச் சென்றுவிட்டது. நாளாந்தம் மரம் ஏறி தொழில் செய்து சங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரும் தொழிலாளர்களின் நலன்கள் புறகணிக்கப்பட்டு சிலரின் நலன்கள் மாத்திரம் கவனிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவே சங்கத்தில் என்றுமில்லாத அளவுக்கு பாரிய நிதி மோசடி இடம்பெற்றமையாகும் எனவும் தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.