194
குளோபல் தமிழ்ச் செய்தியார்..
பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார்.
அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலை கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
குற்றங்களுக்காக கைது செய்யப்படவில்லை.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் குற்றங்களுக்காக கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட பின்னரே குற்றங்கள் சுமத்தப்பட்டன
ஒப்புதல் வாக்கு மூலங்கள் சித்திரவதைகள் மூலம் அவர்களுக்கு தெரியாத மொழிகளில் பெறப்பட்டுள்ளன. அதில் பலர் தமது கையொப்பம் வைக்கவில்லை என்கின்றார்.
ஆனந்த சுதாகரனின் மனைவியை கொன்றது பயங்கரவாத தடைச்சட்டமே
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவியை , பயங்கரவாத தடைச்சட்டமும் சட்டமா அதிபர் திணைக்களமே கொலை செய்தது 98குற்றசாட்டில் 4 குற்றசாட்டுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் ஏனைய 94 குற்ற சாட்டுக்கும் தலா ஆயுள் தண்டனையாக 94 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டள்ளது.
ஏற்கனவே நோய்வாய்பட்டு இருந்த ஆனந்தசுதாகரின் மனைவி கேட்டே மேலும் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றார். ஆகவே அவரை படுகொலை செய்யதது சட்டமா அதிபர் திணைக்களமே.
அரசியல் கைதிகளை வைத்து அரசியல்.
அரசியல் கைதிகளின் விடயம் அரசியல் விடயமாக உள்ளது. அரசியல் கைதிகள் இல்லை என்பதும் , அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதும் கூட அரசியல் தான்
சிங்கள மக்கள் பயங்கரவாதிகளாக பார்க்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யாதார். அதில், 600 பேருக்கு புணர்வாழ்வு அளித்து அவர்களை விடுதலை செய்ய முன்னர் தெற்கிலே கதிர்காமம் உட்பட பல இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தார்கள்.
சிங்கள மக்கள் அவர்களை பயங்கரவாதிகளாக பார்க்க வில்லை. புலிகளை சிங்கள மக்கள் பயங்கரவாதிகளாக பார்த்திருந்தால் , அவர்கள் சென்ற போது எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்கள் பஸ்க்கு கல் எறிந்து இருப்பார்கள் , வீதியில் மறியல் செய்து இருப்பார்கள். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்க வில்லை. ஏனெனில் சிங்கள மக்கள் அவர்களை பயங்கரவாதிகளாக பார்க்க வில்லை.
கிழக்கில் பொலிசை கொன்றவர் எங்கே ?
கிழக்கு மாகாணத்தில் பொலிஸாரை கொன்றவர் என குற்றம் சாட்டப்படும் நபர் இப்ப எங்கே இருக்கின்றார் ? அவர் அரசியல் ரீதியாக விடுவிக்கப்பட்டு யாருக்கு அருகில் இருக்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
ஆயுதம் கொடுத்தவர் எங்கே ?
அதே போன்று பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்தார், பணம் கொடுத்தார் என நாடாளுமன்றில் பேசப்பட்டு ஹன்சட்டில் உள்ளது. ஆனால் அவர் இப்ப எங்கே ? அவர் பயங்கரவாதி இல்லையா ?
தமிழர்களை ஒடுக்கவே பயங்கரவாத தடைச்சட்டம்.
தமிழர்களை இனவழிப்பு செய்தவர்கள் பயங்கரவாதிகளே தொடர்ந்து எம்மை அழிக்கவும் ஒடுக்கவுமே பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக அவர்கள் தண்டிக்க விரும்புவது அரசியல் கைதிகளாக உள்ளவர்களை மாத்திரம் இல்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் தண்டிக்கவுள்ளனர்.
நிபந்தனையற்ற விடுதலை வேண்டும்.
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, புனர்வாழ்வு அளி என கேட்டால் அவர்கள் குற்றம் செய்தவர்கள் என நாம் ஏற்பதாக இருக்கும். எனவே நாம் கேட்க வேண்டியது நிபந்தனையற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே.
தமிழ் அரசியல் வாதிகள் பயங்கரவாதிகள்.
எங்கள் அரசியல்வாதிகளுக்கும், அவர்களுக்கு பின்னால் போகின்றவர்கள் பயங்கரவாதிகள் அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்து புனர்வாழ்வு அளிக்க வேண்டும்.
ஆங்கிலயர் ஆட்சியில் பயங்கரவாதிகள். என தூக்கிலிடப்பட்டவர்கள் சுதந்திரத்தின் பின்னர் தேசப்பற்றாளர்கள் ஆனார்கள். அதே போன்று அவர்களுக்கு பயங்கரவாதிகளாக தெரிபவர்கள் எங்களுக்கு தேசப்பற்றாளர்
தமிழர்களை அடக்கவே பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்தார்கள். தற்போது கொண்டு வர போகின்ற சட்டம் பொருளாதர கொள்கையை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் நோக்கத்திற்காக.
அரசியல் கைதிகள் 108
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அரசியல் கைதிகள் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்கள் என கேட்ட போது , அரசியல் கைதிகள் என இல்லை. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 108 பேர் உள்ளனர் என பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் அரசியலில் தழம்பல் நிலை.
தமிழர்கள் மத்தியில் அரசியல் தழம்பல் நிலை உள்ளமையால் தான் யார் யாரோ வந்து நம் மத்தியில் அரசியல் செய்து விட்டு போகின்றார்கள்.
தீர்ப்பு வழங்கப்படவில்லை..
பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தண்டனைக்காலத்தை அனுவித்து விரைவில் விடுதலையடையலாம் என குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களுக்கு கூட தீர்ப்பு வழங்கப்படமால் காலங்கள். இழுத்தடிக்கப்படுகின்றன.
கூட்டமைப்பு ஏன் மௌனம் காக்கிறது ?
அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்றோம் என கூறிய கூட்டமைப்பினர் மௌனம் காப்பது ஏன் என்பது புரியவில்லை என மேலும் தெரிவித்தார்.
Spread the love