அனைத்துத் தரப்பினரையும் ஆளுமையுடன் கூட்டிணைத்து, செயல் வல்லமையுடன் வழிநடத்திச் செல்லத்தக்க தலைமைக்கு, தமிழர் அரசியலில் வெற்றிடம் நிலவுவதைப் போலவே, நாட்டின் தேசிய மட்டத்திலும் அரசியல் தலைமையில் ஒரு வறுமை நிலை காணப்படுகின்றது. இது, சிலவேளைகளில், சிலருக்கோ அல்லது பலருக்கோ மிகைப்படுத்தப்பட்ட ஒரு பார்வையாகத் தோற்றலாம். ஆனால் அரசியல் உரிமைகளுக்காக பல தசாப்தங்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்ற பாதிக்கப்பட்ட தேசிய சிறுபான்மை இனம் ஒன்றின் அரசியல் நோக்கில் இந்த அரசியல் வறுமையைக் காண முடியும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் பல வடிவங்களில் இடம்பெற்றிருந்தன. சாத்வீகப் போராட்டமும்சரி, ஆயுதப் போராட்டமும்சரி, பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சாத்வீகப் போராட்டமானது, சத்தியாக்கிரகம் தொடக்கம், ஒத்துழையாமை வரையில் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு குழுக்களும் பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டிருந்தன. பல்வேறு வடிவங்களில் அவற்றின் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. அந்த நிலைமை இன்னும் தொடர்வதை கூர்ந்து அவதானிப்பதன் மூலம் கண்டு கொள்ளலாம்.
தமிழர் தரப்பில் வலிமையுள்ள ஓர் ஆயுதப் போராட்டத்தை, விடுதலைப்புலிகள் தீவிரமாக முன்னெடுத்திருந்தபோது, மிதவாத அரசியல் தலைமைகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்திருந்தன. இந்த கூட்டிணைவுக்கு வெளியிலும் முன்னாள் ஆயுதப் போராட்ட குழுக்கள் அரசியல் கட்சிகளாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன.
ஆனால், ஒட்டுமொத்தமாக தமிழர் தரப்பின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டமானது தொடர்ச்சியாக, வீழ்ச்சிப் போக்கிலான ஓர் அரசியல் பயண அனுபவத்தையே பெற்றிருக்கின்றது. இது துரதிஸ்டவசமானது.
இந்த வீழ்ச்சிப் போக்கில் இருந்து மீள்வதற்கு ஆளுமையும் சாதுரியமான செயல் வல்லமையும் உடைய அரசியல் தலைமை அவசியம். ஆனால், பேரின அரசியல்வாதிகளின் அடிப்படை மதவாதத்தை மையமாகக் கொண்ட இனவாத அரசியல் போக்கை சாதுரியமாகக் கையாண்டு தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் தடத்தில் பயணிக்கத்தக்க வலுவானதோர் அரசியல் தலைமை, தமிழர் தரப்பில் இன்னும் உதயமாகவில்லை.
மறுபக்கத்தில், நாடளாவிய ரீதியில் மதச்சார்பற்ற, இனச் சார்பற்ற தேசிய அடையாளத்தைக் கொண்டதோர் அரசியல் போக்கை வளர்த்தெடுத்துச் செல்ல வல்ல தேசியத் தலைமையொன்று பேரினவாதிகள் மத்தியில் இருந்து உருவாகவில்லை.
பௌத்த மதத்தை முதன்மைப்படுத்திய சிங்கள பேரினவாத அரசியல் போக்கையே சிங்களத் தலைவர்கள் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். இந்தப் போக்கு, இந்த நாட்டின் தேசிய சிறுபான்மை இனத்தவரை ஆக்கிரமித்து, அடக்கியொடுக்கி, அவர்களுடைய தேசிய அடையாளத்தை இல்லாமல் செய்வதற்குரிய, திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், சிங்களப் பேரினவாதிகள், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டு தேசிய மட்ட அரசியல் கட்சிகளின் ஊடாக, நீடித்து நிற்கத்தக்க நிலையான அரசியல் அதிகாரத்துக்காக, போட்டி அரசியலிலும் ஆழமாக வேருன்றிச் செயற்பட்டு வருகின்றனர்.
இந்த அரசியல் போட்டியில் வியக்கத்தக்கதொரு மாற்றத்தை 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றம் உருவாக்கியிருந்தது. எதிரும் புதிருமாகச் செயற்பட்டு வந்த இரண்டு பேரினவாதக் கட்சிகளும் ஒன்றிணைந்து நல்லாட்சிக்கான அரசாங்கம் என்ற அடையாளத்தில் ஆட்சி அமைத்திருந்தன. இந்த ஆட்சி மூன்று வருடங்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இப்போதைய நிலைமை என்ன?
இரண்டு தேசிய கட்சிகளும் இணைந்த ஆட்சி இப்போது பிளவுபட்டிருக்கின்றது. பிளவுபடுத்த முடியாத ஒரு நாட்டையும் அதில் ஒன்றிணைந்த ஓர் ஆட்சி முறைக்காக, புதியதோர் அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நல்லாட்சி அரசாங்கம் மூன்று அணிகளாகப் பிளவடைந்துள்ளது. ஊழல்களை இல்லாமல் செய்து, ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பது நல்லாட்சி அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எதிரும் புதிருமாகச் செயற்பட்டு வந்த இரண்டு தேசிய கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள ஆட்சியில் இரு தரப்பினருடைய இணக்கப்பாட்டுடன் இனப்பிர்சினைக்கு ஓர் அரசியல் தீர்வை எட்டிவிட வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்திற்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியிருந்தது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் ஓர் அரசியல் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பியிருந்தார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழர் தரப்பில் இருந்து அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாக இடையூறுகளோ அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிக்கு தடைகளோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டிருந்தார்.
ஆனால் மூன்று வருடங்கள் கடந்த நிலையில், நடத்தப்பட்ட உள்ளுராட்சித் தேர்தல் ஓர் அரசியல் சூறாவளியாக நல்லாட்சி அரசாங்கத்தைத் தாக்கி நிலைகுலையச் செய்துவிட்டது. நல்லாட்சி அரசாங்கத்தை எப்படியாவது வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான எதிரணியினர் எதிர்பாராதவிதமாக இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர். ஆளும் தரப்பைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் படுதோல்வியைச் சந்தித்தன.
உள்ளுராட்சித் தேர்தல் வெற்றியின் மூலம் அரசியலில் உயிர் பெற்றுள்ள மகிந்த ராஜபக்சவின் எழுச்சி, நல்லாட்சி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது. உள்ளுராட்சித் தேர்தலின் தோல்வி, நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளாகிய ஐக்கிய தேசிய கட்சியையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தனித்துவமான அதிகாரத்தின் மீதான பற்றிலும், கட்சி அரசியல் மீதான நாட்டத்திலும் ஈடுபடுத்தி, இரு துருவங்களாக்கி உள்ளது.
இதனால், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனிவழி அரசியல் போக்கில் அடியெடுத்து வைத்து, அரசாங்கத்தில் மாற்றங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும், அந்த முயற்சிகள் எதிர்பார்த்த அளவில் வெற்றி அளிக்காத நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில், அரசியல் ஸ்திரமற்ற நிலையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் 2020 ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், செயல் வல்லமை அற்றதோர் ஆட்சியே இப்போது நிலவுகின்றது.
ஜனாதிபதி ஒரு போக்கையும், பிரதமர் இன்னுமொரு போக்கையும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அதிருப்தியாளர்களாக வெளியேறியுள்ள 16 பேர் கொண்ட அணி மற்றுமொரு போக்கையும் கொண்டதாக அரச தரப்பு மூன்று அணிகளாக உடைந்துள்ளது. இதனால், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகள் செயலிழக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றன.
இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் கண்டுவிட முடியும் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நம்பிக்கை சிதைந்துள்ளது. இதன் காரணமாகவே அரசியல் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அமெரிக்க உயர் மட்டத்தினருடனான சந்திப்பின்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அரச தலைவரின் பேச்சும், பிரதமரின் போக்கும்
உள்ளுராட்சித் தேர்தல் தோல்வியின் பின்னர், தனிவழியில் ஆட்சி அமைப்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் தனித்தனியே முயற்சிகளை மேற்கொண்ட ஓர் அரசியல் சூழல் உருவாகியிருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஏற்பட்ட பிளவையடுத்து, சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த 16 பேர் அமைச்சசரவைப் பொறுப்பில் இருந்து விலகி தனித்துச் செய்பட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் வி;க்கிரமசிங்கவை இராஜிநாமா செய்யுமாறு தூண்டிய ஜனாதிபதி தமது கட்சி ஆதரவாளர் ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்துவதற்கு முனைந்திருந்தார். ஆயினும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் புறந்தள்ளி, தனித்துவமாக ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முற்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆரம்ப முயற்சியும்கூட வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில், குழப்பத்திற்கு உள்ளாகிய அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்;டது. இதய சுத்தியுடனான இணைப்பின்றி அரச தலைவர்களாக ஜனாதிபதியும் பிரதமரும் செயற்படுகின்ற ஒரு சூழலே காணப்படுகின்றது.
மறுபக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அமைப்பில் இணைந்துள்ள பொது எதிரணியினர் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான தமது முயற்சிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். தமது முயற்சியில் வெற்றி பெறுவதற்காக மதவாதத்தையும் இனவாதத்தையும் அவர்கள் முழு அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் இந்தச் செயற்பாடு மே 18 ஆம் திகதி இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிநைவேந்தல் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளாகத் தாங்கள் கருதுகின்ற விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்குப் புத்துயிர் அளித்து பயங்கரவாதத்தை மீண்டும் தலையெடுக்கச் செய்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டது என்று இனவாத ரீதியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அவர்களின் இந்தக் கருத்துக்கள் பெருமளவில் அரசியல் பிரசாரமாக சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி அரசியல் நலன்களை மேம்படுத்தவும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் முற்பட்டிருந்த நிலையில் மாதுலுவாவே சோபித தேரரின் 76 ஆவது பிறந்த தின வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை அரசியல் அரங்கில் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கின்றது. அவர் குறித்த அரசியல் ரீதியான பொதுவான, மக்களுடைய மனத்தோற்றத்தையும் முரண்பட்ட ஒரு நிலைக்கு அந்த உரை தள்ளியுள்ளது. அரச தலைமையின் நிலை குறித்து பல கேள்விகளை எழுப்புவதாகவும் ஜனாதிபதியின் உரை அமைந்துள்ளது என்றே வேண்டும்.
பாடசாலை பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால தனது 47 வருட அரசியல் அனுபவத்தில் கடந்த மூன்று வருடங்களில் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக அவர் தனது உரையில் முக்கிய விடயமாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அரசியல் ரீதியான கழிவிரக்க வெளிப்பாடாகவே இது வெளிப்பட்டிருக்கின்றது என்று கருதும் அளவுக்கு அரசியல் பொது வெளியில் அது தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது.
மறுபக்கத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கான இறுதிக்கட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண அபிவிருத்திக்கான விடயங்கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களும் தமிழர் தரப்பில் சர்ச்சைக்குரிய விடயமாகி இருக்கின்றது. குறிப்பாக அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ள போதிலும், யுத்தத்தின் பின்னர், தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படுவதற்கான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் என்பதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆயினும் அவர்களுடைய எதிர்பார்ப்பு குறித்து பிரதமர் தமது யாழ் விஜயத்தின்போது எதனையும் குறிப்பிடவில்லை.
வடக்கு தெற்கு அபிவிருத்தி இணைப்பு
வடக்கையும் தெற்கையும் அபிவிருத்தி ஊடாக இணைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார். வடக்கையும் தெற்கையும் அபிவிருத்தி ஊடாக இணைப்பதென்பது, வடக்கின் பாரிய அபிவிருத்தித் தேவைகளை எந்த அளவுக்கு, எப்படி பூர்த்தி செய்யப்போகின்றது என்பதைப் பற்றிய விளக்கங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.
வடக்கையும் தெற்கையும் அபிவிருத்தி ஊடாக இணைப்பதென்பது, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் வட மாகாணத்தின் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் கிழக்குக் கரையோரமாக அதிவேக சாலையொன்றை நிர்மாணிப்பதற்கான வேலைத் திட்டம் குறித்து அரசாங்கத்தினால் ஏற்கனவே பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது,
இந்த அதிவேக சாலை என்பது வடக்கையும் தெற்கையும் துரிதப்படுத்தப்படுகின்ற போக்குவரத்தின் ஊடாக இணைக்கின்ற ஒரு திட்டமாகும். யுத்தப் பாதிப்புகள் எதுவுமில்லாத வகையில் பல்வேறு துறைகளிலும் தென்பகுதி அபிவிருத்தி அடைந்திருக்கின்றது. அங்கு பல்வேற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. போதாக்குறைக்கு சர்வதேச அளவில் அபிவிருத்தித் தொடர்புகளை ஏற்படுத்தவதற்காக மத்தள விமானத் தளம் மற்றும் சீன முதலீடுகளுடனான அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பனவும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளாகி கடந்த 9 வருடங்களாக உட்கட்டமைப்பு தவிர்ந்த ஏனைய பாரிய அபிவிருத்திப் பணிகள் எதனையும் காணாத வடக்கை தெற்குடன் அபிவிருத்தி தொடர்பில் இணைப்பதன் மூலம் வடபகுதி மக்கள் எந்த வகையில் நன்மை அடையப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.
அதேவேளை, கிழக்குக் கரையோரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் காட்டுப்பிரதேசங்களாகிய அரச காணிகளில் திட்டமிட்ட வகையில் புதிய சிங்களக் குடியேற்றங்களும், அவற்றோடு ஒட்டிய குடியேற்றவாசிகளுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட உள்ளன என்ற சந்தேகம் ஏற்கனவே எழுந்திருக்கின்றது. இத்தகைய சந்தேகத்தின் பின்னணியில் வடபகுதிக்கு வருகை தந்த பிரதமர் ரணில் வி;க்கிரமசிங்க, வடக்கையும் தெற்கையும் அபி;விருத்தி ஊடாக இணைப்பதற்கான வேலைத்திட்டங்களை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்திருப்பது அந்த சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இலங்கை அன்னியரிடமிருந்து சுதந்திரமடைந்த நாள் முதலாக தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த இனப்பிரச்சினை இழுபறி நிலையில் இருந்து வருகின்றது. அதன் உச்ச கட்டமாக தலைதூக்கியிருந்த ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்துவிட்;ட போதிலும், இன முரண்பாட்டு பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீரவு காண்பதற்குரிய தெளிவான அறிகுறிகளைக் காண முடியவில்லை. அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதும் இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.
ஆனால் காலத்துக்குக் காலம் இங்கு இனப்பிரச்சினை என்ற ஒரு பிரச்சினை கிடையாது. பொருளாதாரப் பிரச்சினையே இருக்கின்றது. அதற்கு அரசியல் ரீதியாக அல்லாமல் பொருளாதார அபிவிருத்தியின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் அரச தரப்பில் இருந்து வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளன.
தாமரை இலை தண்ணீரின் நிலை
இந்த நிலையில் வடபகுதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு குறித்து எதனையும் குறிப்பிடாமல் வெறுமனே, வடக்கையும் தெற்கையும் அபிவிருத்தியின் ஊடாக இணைப்பதற்கான வேலைத்திட்டங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார். இது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் அக்கறையற்றிருக்கின்றது. அல்லது அது அவசியமில்லை என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது என்ற அனுமானத்திற்கே வழி வகுத்துள்ளது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் ஊடாக ஓர் அரசியல் தீர்வை எட்டிவிட முடியும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எதிர்பார்;ப்பு. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனின் நம்பிககையும்கூட. ஆனால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சூழலில், அரசியல் உரிமை, அரசியல் ரீதியான தீர்வு என்ற தளத்திற்கு அப்பால், பொருளாதார அபிவிருத்தி என்ற குறுகிய வட்டத்திற்குள் இனப்பிரச்சினை விவகாரத்தை மூடி மறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை பிரதமருடைய வடமாகாண விஜயத்தின் மூலம் உணரக் கூடியதாக உள்ளது.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமல்லாமல், இப்போது மூன்றாவது அரசியல் சகதியாகப் பரிணமித்துள்ள பொதுஜன பெரமுன என்ற மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கட்சியின் இணக்கப்பாடும் அவசியம் என்ற நிலைமை உருவாகியிருக்கின்றது.
ஐக்கிய தேசிய கட்சியயும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் நல்லாட்சி அரசாங்கத்தில் தாமரை இலை தண்ணீர் போன்ற நிலையிலேயே காணப்படுகின்றன. இரண்டு கட்சிகளும் கொள்கைகளின் அடிப்படையில் ஒன்றிணைந்து வலுவாகச் செயற்படுவதற்குரிய அரசியல் ஸ்திரத்தன்மையைக் காண முடியவில்லை. பொது எதிரணியினராகிய பொதுஜன பெரமுனவும் இந்தக் கட்சிகளுடன் இணைந்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட முன்வரும் என்று கூற முடியாதுள்ளது.
கையறு நிலைமையை எட்டியிருக்கின்றதோ என்று எண்ணி அச்சமடையும் அளவுக்கு அரசியல் ஸ்திரமற்ற தன்மை மோசமடைந்துள்ள ஒரு சூழலில் உறுதியானதோர் அரசியல் தலைமை உருவாக வேண்டிய அவசரத் தேவையையே இன்றைய நாட்டின் அரசியல் வெளியில் காணக்கூடியதாக உள்ளது. இந்த அரசியல் தலைமைக்கான வறுமையில் இருந்து நாடு எப்போது, எவ்வாறு மீளப் போகின்றது என்று தெரியவில்லை.