இறுதிக்கட்ட யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்தோரின் விபரங்களை வெளியிட தயாரென காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள், முல்லைத்தீவில் இன்று (02.06.17) இடம்பெற்றன. இவற்றை புறக்கணித்து மக்கள் போராடியதோடு, சரணடைந்தோரின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறும் அதன் பின்னர் தாம் சாட்சியப்பதிவிற்கு ஒத்துழைப்பதாகவும் கோரியிருந்தனர். அதற்கு பதிலளித்த சாலிய பீரிஸ், படையினரிடம் சரணடைந்தோரின் விபரங்களை வெளியிடுமாறு எழுத்து மூலம் தம்மிடம் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில், அவற்றை வெளியிடத் தயார் எனக் கூறியுள்ளார்.
காணாமல் போனோரது உறவினர்களின் உணர்வை தம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளதென குறிப்பிட்ட சாலிய பீரிஸ், கடந்த காலங்களை போலல்லாது, காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் நம்பத்தகுந்த வகையில் அமையும் என்றும், மக்கள் தம்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு, காணாமல் போனோரை கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.