குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இலங்கை அரசின் காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் அலுவலகம் அமைப்பதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜெனிவா தீர்மானத்திற்கு இவ்வலுவலகம் முரணானது என்றும் போராட்டத்தின்போது கூறினர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வட கிழக்கு பகுதிகளில் இருந்து ஒன்று திரண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
எனினும் காணாமல் போனோர்(OMP) அலுவலகத்தின் அமர்வு இன்றுமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் நிமல்க்கா பெர்னாண்டோ ஜெயதீபா புண்ணியமூர்த்தி கணபதிப்பிள்ளை வேந்தன் எஸ் லியனகே மிராக் ரகீம் மொகென்ரி பீரிஸ் உள்ளிட்ட ஆணையாளர்கள் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டதோடு காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் விளக்கத்தையும் வழங்கியிருந்தனர்.
இவ் அமர்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 40 பேர் வரை கலந்துகொண்டு சாட்சியங்களை வழங்கியிருந்தனர். இதேவேளை இவ் அலுவலகத்தை நிராகரித்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 250இற்கும் மேற்பட்ட மக்களுடன் சந்தித்த காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர்கள் தமது அலுவலகத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கம் அளித்ததோடு காணாமல் ஆக்கபட்ட்வர்களின் உறவுகளின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டனர்.
காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்பான விபரங்களை விரைவில் வெளியிடுமாறும் தம்மால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கபட்ட கோரிக்கைகளான காணாமல் ஆக்கபட்ட்வர்களின் விபரங்களை வெளியிடுதல் ,அவர்கள் தடுத்துவைக்கபட்டுள்ள இடங்களை வெளிப்படுத்துதல் என்பனவற்றை முதலிய நடவடிக்கைகளை முன்னெடுத்த பின்னரே, இந்த அலுவலகத்தை தாம் நம்புவதா இல்லையா என தாம் தீர்மானிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
இதற்க்கு பதில் வெளியிட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் இன்னும் ஓரிரு மாதங்களில் தாம் காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதாக உறுதிபட தெரிவித்ததோடு இந்த வாக்குறுதியை எழுத்துமூலமும் வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிவில் சமூக அமைப்புகளுடனும் காணாமல் போநோருக்கான் அலுவலகத்தினர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்.