துப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு தூத்துக்குடியில் இன்று விசாரணையை ஆரம்பிக்கின்றது.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ம் திகதி தூத்துக்குடியில் போராட்டம் மேற்கொண்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடி தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த சட்டத்தரணி ராஜராஜன் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட் மனுவில் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையகம் விசாரணை நடத்தவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையகம் உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையகம், உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அந்த குழு உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று, துப்பாக்கி சூடு குறித்து களத்தில் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தியது.
விசாரணைக்கு பின்னர் 2 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்உத்தரவிட்டது. அந்தவகையில் அமைக்கப்பட்ட மனித உரிமை ஆணையகம் சார்பாக சிறப்பு குழு இன்று தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை பார்வையிடுவதுடன் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களை சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.
குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் ஆய்வு செய்த விவரங்கள், தேசிய மனித உரிமை ஆணையகத்தில் 2 வாரங்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கபட உள்ளது.