Home இலங்கை யாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்…

யாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்…

by admin

ந.பரமேசுவரன் – சிரேட்ட ஊடகவியலாளர், நூலகர். 

பா.துவாரகன் அபிவிருத்தி உத்தியோகத்தர்.

தற்போது யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) என்ற பெயருடன் யாழ் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையானது யாழ்ப்பாணம் வைத்தியசாலை (Jaffna Hospital), யாழ் வைத்தியசாலை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. Yarl Hospital – யாழ். வைத்தியசாலை என்பது யாழ்ப்பாணம் வைத்தியசாலை என்பதன் சுருக்கிய வடிவமே. இப்பெயரில் தனியார் வைத்தியசாலை ஒன்றும் திருநெல்வேலியில் இயங்கி வருகின்றது! யாழ்ப்பாணம் வைத்தியசாலையானது பெரிய ஆசுப்பத்திரி என்றும் யாழ்ப்பாண மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. முன்பு இதனை தரும ஆசுப்பத்திரி என்றும் அழைத்தனர்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆரம்பத்தில் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital- F.N.S. Hospital) என்றே அழைக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த ஐரோப்பியர்கள் சிலர் ஒன்றிணைந்து யாழ்ப்பாண மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள்  கழகம் (Friend-in-Need Society) என்ற பெயரில் ஒரு கழகத்தை உருவாக்கினர்.

இந்த ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக அங்குரார்ப்பணக் கூட்டம் 09/03/1841 செவ்வாய்கிழமை மாலை நீதிமன்ற வளாகத்தில் கப்டன் கோச்ரேன் (Captain Coachrane) தலைமையில் இடம் பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மத்திய கல்லூரி தாபகர் பீற்றர் பேர்சிவல் (Peter Percival) நீதிமன்ற காரியதரிசி எப்.சி.கிறீனியர் (F.C.Greenier)ஆகியோர் கலந்து கொண்டனர். மாதாந்த சந்தா பணமாக 8 பவுண்ஸ் அறவிடுவதென தீர்மானிக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையின் தாபகர் : பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke)

பேர்சிவல் அக்லண்ட் டைக்இவரே யாழ் மாவட்டத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர் (01.10.1829 – 09.10.1867). அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அதிகாரிகளில் அக்லண்ட் டைக் முதன்மையானவர். தற்போது பழைய பூங்கா என அழைக்கப்படும் அரச அதிபர், ஆளுநர் இல்லம் மற்றும் அயலில் உள்ள அலுவலகங்களில் உள்ள மரங்கள் யாவும் இவரால் நாட்டப்பட்டவையே. டைக் இங்குள்ள மரங்களில் உள்ள பூக்களின் நறுமணத்தை சுவாசித்தும் பழமரங்களின் கனிகளை சுவைத்தும் வந்தார். பொதுக்களும் அனுமதி பெற்று இப் பூங்காவைப் பார்வையிட்டும் பூங்காவிலுள்ள கனிகளைப் புசித்தும் வந்தனர்.

தற்போது போதனா வைத்தியசாலையாக உருவாகியுள்ள யாழ்ப்பாணம் வைத்தியசாலையை தாபித்தவர் இவரே. 1850 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital) என்ற பெயரில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke)  உதவி அரசாங்க அதிபராக இருந்த வில்லியம் துவைனம் (William Tywnam) ஆகியோரிடம் வைத்தியசாலை கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அரசாங்க அதிபர் டைக் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மூலமும் தனது நண்பர்களிடமும் நிதி சேகரித்து ரூபா பத்தாயிரம் வழங்கினார். அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக் தனது வருமானத்தின் பெரும் பகுதியை யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் (F.N.S. Hospital) கட்டடிப் பணிகளுக்காகச் செலவிட்டார்.

கோப்பாயில் வசித்து வந்த அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக்கின் பூதவுடல் அவர் காலமான 1867 ஒக்டோபர் 9 ஆம் திகதியன்றே யாழ் பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. டைக்கிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்த அரச அலுவலகங்கள் 4 –  5 தினங்கள் மூடப்பட்டன.

ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital- F.N.S. Hospital)

1850 ஆம் ஆண்டு  நவெம்பர் மாதம் 27 ஆம் திகதி வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. வயல்வெளிகள் தோட்டங்கள் என்பனவற்றின் நடுவிலேயே ஆரம்பத்தில் வைத்தியசாலை அமைந்திருந்தது. இரண்டு விடுதிகளுடன் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. விடுதிகளுக்கு விக்ரோரியா மகாராணியின் பெயர் சூட்டப்பட்டது. (Victoria Jubilee Ward, Victoria Lying In Ward) பொது சிகிச்சை விடுதி, தோல் சிகிச்சை விடுதி என்பவற்றில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விடுதியில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு உணவு வழங்குவதற்காக சமையற்காரர்களும் நியமிக்கப்பட்டனர். இங்கு இருபத்திநான்கு மணிநேரமும் சேவை வழங்கப்பட்டது. விடுதியில் தங்கிநின்று சிகிச்சை பெற்றவர்களுக்கு உடைகளும் வழங்கப்பட்டன.

வைத்தியசாலையை நிருவகிக்கும் பொறுப்பு  அரசாங்க அதிபர் டைக்கிடமும் உதவி அரசாங்க அதிபர் துவைனத்திடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை ஆபத்துக்கு உதவும்; வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital) என அழைக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு மே மாதம் வைத்தியசாலைக்கு ஆறாயிரம் ரூபாநிதி உதவி வழங்கப்பட்டது.

14.12.1899 அன்று யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் கையளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. 12.10.1905 வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திடம் கையளிப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1907 இல் வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. அன்று முதல் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை என அழைக்கப்பட்டு வந்த வைத்தியசாலை யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை (Jaffna Civil Hospital) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டபோது வைத்தியசாலை கட்டடத்தின் பெறுமதி ரூபா 20,000.00 என மதிப்பீடு செய்யப்பட்டது.

1907 இல் சபாபதியும் சட்டத்தரணி சங்கரப்பிள்ளையும் visitors ஆக (வைத்தியசாலை மேற்பார்வை-நிருவாகம்) நியமிக்கப்பட்டனர் (வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது). 12.04.1909 இல் சட்டத்தரணி திருநாவுக்கரசு ஞாபகார்த்தமாக வெளிநோயாளர் மருந்தகம் நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சேர் அலன்பெரி (Sir. Alen Pery) அடிக்கல்லை நாட்டினார். 01.03.1919 இல் பணம் கொடுத்து பராமரிக்கும் விடுதி (paying ward) திறந்து வைக்கப்பட்டது.

ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலையில் (F.N.S. Hospital) கடமையாற்றிய வைத்தியர்கள்

Dr.J.Evarts (இவாட்ஸ்) : சத்திர சிகிச்சை நிபுணராக (Residential Surgeon)அரசாங்க அதிபர் டைக்கினால் நியமனம் செய்யப்பட்டார். இவரது கடைசி மகன் அல்பிரட் இவாட்சும் பின்னாளில் மருத்துவராக கடைமையாற்றினார்.

Dr.S.Green (சாமுவேல் கிறீன்) ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலையின் முதலாவது வருகை சத்திர சிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார்.

Dr. William Paul (வில்லியம் போல்): மானிப்பாய் கிறீன் மெமோறியல் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த Dr.வில்லியம் போல் 1874 ஆம் ஆண்டு  சத்திர சிகிச்சை நிபுணராக (Residential Surgeon) நியமனம் செய்யப்பட்டார்.

Dr.C.T. Mills (மில்ஸ்) : முதலாவது மருந்தாளராகக் கடமையாற்றிய அதேவேளை சத்திரசிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார். (First Dispenser and Residential Surgeon)

Dr.Danforth இடன்போர்த் : மானிப்பாய் கிறீன் மெமோறியல் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின் அமெரிக்காவில் MD பட்டம் பெற்ற Dr.இடன்போர்த் சத்திர சிகிச்சை நிபுணராக நியமனம் செய்யப்பட்டார்.

Dr.Dutton (இடற்றன்): பொதுவைத்திய நிபுணராகவும், சத்திரசிகிச்சை நிபுணராகவும்  கடமையாற்றினார்.

யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் (Jaffna Civil Hospital)  

ஆரம்பத்தில் கடமையாற்றிய மருத்துவர்கள்.

Dr. F.G.Spital ,

Dr. C.Kandaiah,

Dr. Gnanam Cooke (House Surgeon)

References:

  1. Hindu Organ
  2. History of Jaffna by John
  3. Ceylon Observer
  4. Morning Star
  5. Catholic Guardian
  6. Biographical Sketches of Puvirajasinga Mudaliyar
  7. யாழ் மாவட்டச் செயலக பொன்விழா மலர் 2015

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More