பச்சை, நீலம், சிவப்பு உறுப்பினர்கள் வரிசைகட்டி சிக்கப் போகிறார்கள்….
பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸுடன் தொலைபேசியில் உரையாடிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை தாம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தனக்கு அனுப்பிவைக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரியுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன், நாடாளுமன்றத்தில் அதனை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பச்சை, நீலம், சிவப்பு உறுப்பினர்களின் கைவரிசையை, பெயர்ப் பட்டியல் வெளியான பின்னர் பார்த்துக்கொள்ளலாம்”
பேர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத் தலைவர் அர்ஜுன் அலோசியஸுடன் தொலைபேசியில் உரையாடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயர்ப் பட்டியலை அரசாங்கம் உடன் வெளியிட வேண்டும் என, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.கண்டி அங்கும்புரையில் அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அர்ஜுன் அலோசியஸுடன் தொலைபேசியில் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது பெயர்களையும் அரசாங்கம் உடன் வெளியிடவேண்டும். இல்லையென்றால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதனால் அவப்பெயர் ஏற்பட்டும். பச்சை, நீலம், சிவப்பு உறுப்பினர்களின் கைவரிசையை, பெயர்ப் பட்டியல் வெளியான பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” எனவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
குற்றம் இழைத்தோருக்கு தராதரம் பாராது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..
அர்ஜூன அலோசியஸிடம் இருந்து நான் பணம் வாங்கவில்லை. அந்த பட்டியலில் நான் இல்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை. என்றாலும் 118 பேர் அர்ஜூன அலோசியஸூடன் தொடர்புக் கொண்டு பணம் பெற்றதாக கூறப்படுகின்றது. இதன்போது அலோசியஸூடன் சாதாரண உறவினை மீறி பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் தராதரம் பராமல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அர்ஜூன அலோசியஸூனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு 118 பேர் பணம் பெற்றதாக கூறப்படுகின்றது இந்த பட்டியலில் நான் இல்லை. அர்ஜூன அலோசியஸிடம் நான் பணம் வாங்கவில்லை. அதற்கான தேவை எனக்கு ஒருபோதும் இல்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் பட்டியலை வெளியிடும் வரை எம்மால் எதுவும் கூற முடியாது. என்றாலும் அரசியல்வாதி என்ற வகையில் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் அரசியல் செய்ய முடியாது. ஆனால் அந்த தொடர்பினை கொண்டு தவறுகள் செய்ய முடியாது. ஊழல் மோசடிகளில் ஈடுப்பட முடியாது.
எனவே வர்த்தக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வர்த்தகர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ளவதில் எந்த தவறுகள் இல்லை. அதற்கு மாறாக அவருடனான தொடர்புகளின் போது குற்றம் இழைத்திருந்தால் அது குற்றமாகும்.எனவே அர்ஜூன அலோசியஸூடனான தொடர்பினை கொண்டு யாராவது குற்றம் இழைத்திருந்தால் அவரகளுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் தராதரம் பராமல் நல்லாட்சி அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும். அதில் எந்தவொரு ஆட்சேபமும் இல்லை என்றார்.