குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜோர்டான் அரசு அண்மையில்; அமுல்படுத்திய புதிய வரிவிதிப்பு சட்டம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடத்திய 4 நாள் போராட்டத்துக்கு அடிபணிந்த பிரதமர் இன்று பதவிவிலகியுள்ளார். ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்ததனால், கொதிப்படைந்த மக்கள் கடந்த 4 நாட்களாக வீதிகளில் திரண்டு தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். போராட்டம் நடத்திய மக்கள் மீது காவற்துறையினர், தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியிருந்தனர்.
இந்த நிலையில். கடந்த இரண்டாண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வரும் ஹனி அல் முல்கியை பதவி விலகக் கோரி ஜோர்டன் மன்னர் அப்துல்லா உத்தரவிட தயாரான நிலையில், மன்னரை இன்று சந்தித்த ஹனி அல் முல்கி, தனது தனது பதவிவிலகல் கடிதத்தினை கையளித்துள்ளார். அவரது பதவிவிலகலை ஏற்றுகொண்ட மன்னர் அப்துல்லா, விரைவில் புதிய பிரதமரை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோர்தானில் வரி அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம்
Jun 4, 2018 @ 03:43
ஜோர்தானில் வரி அதிகரிப்பிற்கு எதிராக மூன்றாவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஜோர்தானில் இவ்வாறான ஓர் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வரி அறவீடு செய்யப்படுவதாகவும் இது வறிய மற்றும் மத்திய தர மக்களை பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜோர்தானின் தலைநகர் அம்மானில் குழுமியிருந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர் என குற்றம்சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது