குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீண்ட காலத்தின் பின்னர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் , இணைத்தலைவர்கள் இடையில் வெளியேறி சென்றமையால் , முடிவுக்கு கொண்டு வரப்படாமல் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் எழுந்து சென்றனர்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணிக்கு யாழ் அரச அதிபர் நா.வேதநாயகனின் வரவேற்பு உரையுடன் , கூட்டம் ஆரம்பமானது.
தொடர்ந்து ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிக்காக திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிகளும் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடுவதற்காக முன்வைக்கப்பட்ட 09 பிரதான விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.
இந்த விடயத்திற்குள் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நீண்ட நேரமாக கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் கருத்துக்களை முன்வைத்துப் பேசியிருந்த்துடன் சில தீர்மானங்களையும் எடுத்திருந்தனர்.
இதனால், கூட்டத்தில் மிக முக்கியமாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களை எடுக்க வேண்டிய துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் உள்ளடக்கப்பட்ட எந்தவொரு விடயங்கள் குறித்தும் பேசப்படாமலே கூட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.
குறிப்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி சபைகள், வர்த்தகம், தொழில் துறை, தொல்லியல், விவசாயம், மின் விநியோகம், சுகாதாரம், கல்வி, நீர் விநியோகம்,போக்குவரத்து மற்றும் தபால், வீடமைப்பு உள்ளிட்ட போன்ற முக்கிய விடயங்கள் எவையும் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அதேவேளை மீள்குடியேற்றம் குறித்து பேசுவதென ஒளிப்படத்தில் காண்பிக்கப்பட்ட போதும் அதுவும் எடுத்துக் கொள்ளப்படாமல், தனியே வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோதமாக கடலட்டை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள வெளியூர் மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் பேசி கூட்டத்தை முடித்துக் கொண்டனர்.
கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பலதும் எடுத்துக் கொள்ளப்படாமலும் கூட்டம் நிறைவு பெறுகிறதோ அல்லது ஒத்திவைக்கப்படுகிறதோ என்பது குறித்தும் எதுவும் தெரிவிக்காமல் கூட்டத்தில் இருந்த இணைத்தலைவர்கள் எழுந்து சென்றதை தொடர்ந்து கூட்டத்திற்கு வந்தவர்களும் பின்னால் எழுந்து சென்றனர்.
நீண்ட காலத்தின் பின்னர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய விடயங்களை எடுத்துக் கொள்ளாமல் கூட்டம் முழுமைப்படுத்தாமலே முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.