குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபரால் நியமிக்கப்பட்ட போதைப் பொருள் சிறப்பு காவல்துறை அணியால் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படாத விவகாரம் தொடர்பில் நீதிமன்று சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. அதுதொடர்பில் நீதிமன்றின் உத்தரவில் அறிக்கை ஒன்றை யாழ். பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் மன்றில் இன்று சமர்ப்பித்தார்.
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பது என்ற தொனிப் பொருளில் கடந்த மே 31ஆம் திகதிவரையான காலப் பகுதியில் வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் சிறப்பு காவல்துறை பிரிவு ஒன்றை அமைத்தார்.
போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் பொது மக்கள் தகவல் வழங்கும் வகையில் தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் யாழ். மாநகர சபைக்குட்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையிலான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த போது, மாணவர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் இடமொன்று தொடர்பில் பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டது. அந்த தகவலை யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியால் சிறப்பு காவல்துறைப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தேடுதலில் ஈடுபட்ட காவல்துறையினர் ஒரு தொகை மாவா போதைப் பொருள் 5 உரப் பையிலிடப்பட்ட பொதிகளைக் கைப்பற்றினர். அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டார். மாவா போதைப் பொருள் பொதிகளையும் சந்தேகநபர்களையும் காவல்துறையினர் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றதை சுகாதார மருத்துவ அதிகாரி உள்ளிட்டவர்கள் அவதானித்ததுடன், அந்த நடவடிக்கையை ஒளிப்படங்களையும் எடுத்திருந்தனர்.
சம்பவம் இடம்பெற்ற மறுநாள் மாவா போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவேறு வழக்குகளில் 2 சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். ஆனால் சுகாதார மருத்துவ அதிகாரியின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்றில் முற்படுத்தப்படவில்லை. அவரிடம் மீட்கப்பட்ட மாவா போதைப் பொருள் தொடர்பிலும் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பில் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்திய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டிருந்தது. அதனையடுத்து மாவா போதைப் பொருளைத் தயாரிக்கும் புகையிலை உள்ளிட்ட மூலப்பொருள்கள் அடங்கிய 2 உரப் பை பொதிகளை காவல்துறையினர் கடந்த வாரம் மன்றில் முன்வைத்தனர்.
மேலும் அதுதொடர்பில் யாழ்.பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் இன்று மன்றில் முன்னிலையாகி அறிக்கை ஒன்றை முன்வைத்தார். அதனால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது