குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்..
யாழ் மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் காணி வழங்கி குடியேற்றுகின்ற திட்டமொன்று இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்கள் தலைமையில் இன்றைய தினம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போது இத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் முன்மொழிந்தார். அது தொடர்பில் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் படையினரின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். இங்குள்ள மக்களுக்கே காணிகள் இல்லாத நிலையும் இருக்கின்ற போது படையினருக்கு எவ்வாறு காணிகளை வழங்க முடியும்.
யாழில் மட்டும் 14 ஆயிரம் பேருக்கு காணிகள் இல்லை. ஆகவே இவ்வாறு காணிகள் இல்லாதவர்களுக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பளையில் இருக்கின்ற காணிகளை வழங்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் யோசனையொன்றை முன்வைத்தார்.
இதன் போது யாழில் காணிப் பிரச்சனையை த் தீர்ப்பதற்கு வடமாகாண சபையும், திணைக்களங்களும் மாங்குளத்திற்கு நகர வேண்டும். அவ்வாறு சென்றாலே காணிப் பிரச்சனைனயை தீர்க்க முடியுமெ விவசாய அமைச்சர் சிவநேசன் குறிப்பிட்டார்.
இதன் போது குறிக்கிட்ட அமைச்சர் விஐயகலா மற்றும் சிறிதரன் ஆகியோர் பளையிலுள்ள இந்தக் காணிகள் குறித்து பகிரங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கு வேறு யாரும் வர முன்னதாக இந்த மக்கள் சென்று குடியமர வேண்டுமென்று தெரிவித்தனர்.
ஆகவே யாழில் காணியில்லாதவர்கள் பளையிலுள்ள அந்தக் காணிகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் அதனை பெற விரும்புகின்றவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.