வடமாகாணத்தில் கல்வி வலயங்களினதும் பாடசாலைகளினதும் நிர்வாகக் கட்டமைப்புக்களை சீர்குலைக்கும் வகையில் – அரசியல்வாதிகளாலும் ஒருசில கல்வி அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் வடமாகாணத்தில் தலைதூக்கியுள்ளது.
இது வடமாகாணத்தின் கல்வி நிர்வாகக் கட்டமைப்புக்களையும் தாபன விதிகளையும் மீறி செயற்படும் முறையற்ற நிலைக்கு சென்றுள்ளது. இதை கவனிக்கவேண்டிய தலைமைகளும் பொறுப்பற்று செயற்பட்டு – தமது அரசியல் இருப்பை பலப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு செயற்படுவது கல்வி சமூகத்தை நம்பிக்கை இழக்க வைத்திருக்கிறதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசியல்பிரமுகர்களின் பிரத்தியேக செயலர்களால் இடமாற்றம் வழங்குவதும்- அதிபர்களை ஒன்றிணைத்து கூட்டங்களை நடத்த முயல்வதும் – பிரதேச நலன் எனக் கூறிக்கொண்டு ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களைக் கவனிப்பதுமாக – வடமாகாணத்தின் கல்விக்கட்டமைப்பு முழுவதுமாக அரசியல்மயமாகிவருவது ஆபத்தானதாகும். இதனை தெரியப்படுத்தியும் – முறைகேட்டின் தார்ப்பரியம் உணராத அரசியல் வாதிகளின் அசமந்தம் – மிகமிக ஆபத்தானதாகும்.
சில கல்வி வலயங்களில் – ஓய்வுபெற்ற கல்விநிர்வாக சேவை உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் வடமாகாண கல்வியமைச்சு நியமித்துள்ளது. பிரச்சினைகள் ஏற்படும்போது -சட்ட ரீதியாக பொறுப்புக்கூற அவசியமற்ற இவ்வாறானவர்கள் – வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் கட்டுப்படாதவர்களாக – கல்வி வலயங்களில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். தமது தனிநபர் நலன்களுக்காக – குறித்த பிரதேசத்தின் கல்வியை சீர்குலைக்க முயல்வதும் எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடமாகாணத்தில் போதிய கல்விநிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் உள்ளநிலையில் – ஒப்பந்த உத்தியோகத்தர்களின் ஒப்பந்தங்களும் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
வடமாகாணத்தின் கல்விகட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை நிவர்த்திசெய்ய – சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றதெனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது