இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க மாநில அரசு தயாராக இருக்கிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி நேற்றையதினம் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசும்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யும் கைதிகளுடன் சிறையில் நோயால் கஷ்டப்படும் 2 இஸ்லாமிய கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்
அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது: பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் அவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் உச்ச நீதிமன்றத்தின் கையில் உள்ளது என்பதனால் உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்தால் குறித்த 7 பேரையும் மாநில அரசு விடுதலை செய்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாநில அரசால் முடிவு எடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் கைதிகளுக்கு என்று சில வழிகாட்டுதல்களையும் கட்டுப்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. அதற்கு உட்பட்டுதான் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். நோய் பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்படும் 2 இஸ்லாமிய கைதிகளும் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்களை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்