குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை தடுக்க வடக்கு மாகாண சபை நேற்று (06.06.18) செயலணிக்குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்த குழுவில் வடக்கு மாகாண சபையின் பேரவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம், பீ. சத்தியலிங்கம், ரி. லிங்கநாதன், ரி. ரவிகரன், கே.சிவநேசன், சீ. தவராசா, கே. யாசந்தன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வடக்கில் சிங்கள மக்களை அரசாங்கம் குடியேற்றக் கூடாது எனக் கூறி வடக்கு மாகாண சபை யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளதுடன் அதன் பிரதி ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள மகாவலி காணிகள், வனபாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் ஆகியவற்றுக்கு வடக்கு மாகாண சபை உரிமை கோரியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்த போதிலும் வடக்கில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதை நிறுத்த மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை என அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர் என தெற்கின் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.