கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் உயிரை நுண்கடன் நிதி நிறுவனங்கள் பலியாக்கி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஐந்து மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் 53 தற்கொலை மரண சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதில் 2016ம் ஆண்டு 97 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன், 2017ம் ஆண்டு கடந்த வருடம் 116 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த இரண்டு வருடங்களையும் விட இந்த ஆண்டு ஐந்து மாதத்திலேயே 53 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களின் முன்னர் ஒரு யுவதி மட்டக்களப்பு வற்தாறுமூலையில் நுண்கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். கிருஷ்ணன் கோயில் வீதி வந்தாறுமூலையை வதிவிடமாகக் கொண்ட அழகரெத்தினம் டிசாந்தினி (24வயது) என்கின்ற ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் மட்டக்களப்பு ஏறாவூர் மாவடிவேம்பைச் சேர்ந்த 22வயதுடைய சந்திரமோகன் கிருபைராசா என்ற இளைஞரும் நுண்கடன் பிரச்சினைகாரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன் பிரச்சினை காரணமான மரணங்கள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்தில் கல்வி நிலையில் வீழ்ச்சி காணப்படுவதுடன் போதைப் பொருள் மற்றும் மதுபாவனையால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தையும் குறிப்பாக மட்டகளப்பு மாவட்டத்தையும் இத்தகைய பாதிப்புக்களிலிருந்து மீட்டெடுக்க உரிய உபாயங்களை கையாள வேண்டும் என கோரப்படுகிறது.