ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா!
நீதியின் தாயென நிமிர்ந்த தெய்வமே
கண்ணகைத் தாயே!
வரணியில் உன் சந்நிதியில்
சாதிய திமிரை எப்படி அனுமதித்தாய்…
ஊரெல்லாம் கூடி
இழுக்கின்ற தேரை
பாரமிழுக்கும் யந்திரத்தால் இழுப்பிக்க
நீ எப்படி அதில் அமர்வாய்.
நிச்சயமாய்
நீ அங்கு இல்லை என்பேன்!
நீதி செத்த கோபத்தால்
பாண்டியன் நாடெரித்து
மனம் ஆறாமல் பாம்பாகி
எங்கள் ஈழநிலம் அடைந்தாய்
இங்கும்
செட்டிச்சி பெண்
தெய்வமாவது எப்படி என
உருமாற்றியவர் நாண
உருக்குலையாது நீ நிமிர்ந்தாய்
இன்று நின் சந்நிதியின் பெயரில்
வரணியில் நடந்த அநியாயத்தை
எப்படி அனுமதிப்பாய்!
தாயே எழுந்தருளி
ஈனர் மனம் கொழுத்தி
நீதியை காத்திடம்மா…….!