குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..
சிறு இனத்தின் பேருரு – உரு குறும்படம்மீதான ரசைக் குறிப்பு!
ஞானதாஸ் காசிநாதர் இயக்கிய ‘உரு’ குறும்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. நாம் நன்கு அறிந்த கதைதான். தினமும் எங்கள் தெருவில் பார்க்கும் முகங்களும் சதா எங்களுடன் வாழும் மனிதர்களைப் பற்றிய கதைதான். தொலைக்காட்சிகளில் பேட்டிகளாக கேட்ட குரல்களும் ஆவணப்படங்களாக பார்த்த வாழ்வும்தான். ஆனால் ஒரு சினிமாவாக அதிலும் எங்கள் வாழ்வு, விடுதலை, பண்பாடு என்பவற்றை துல்லியமாக பிரதிபதலிக்கும் ஒரு சினிமாவாக வெளிவந்திருக்கும் படைப்பே உரு குறும்படமாகும்.
தேவன் – கோகிலா ஒரு நடுத்தரக் குடும்பம். அவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகன் ஆதி இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்படுகிறார். பிள்ளை காணாமல் ஆக்கப்பட்டதுடன் கோகிலா மனமுடைந்த நிலையில் ஒரு குழந்தையைப் போல வாழ்கிறார். மகள் லாவண்யாவின் திருணமத்தை நடத்துவதற்கும் ஆதியை எதிர்பார்த்த நிலையில் வாழ்கிறார். இதனால் லாவண்யாவின் காதலன் (ஆதியின் நண்பர்) முரண்பட்டுச் செல்கிறார். இந்த நிலையில் புதிதாக இரண்டு நபர்கள் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் மகன் ஆதியிடமிருந்து வருவதாகவும் அவர் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் வெளியில் வருவார் என்றும் கூறுகின்றனர். அவர்கள் கொண்டு வரும் கடிதத்தில் உள்ள கையொப்பம் மகனின் கையொப்பத்துடன் ஒத்துப்போகின்றன.
இந்த நிலையில் மகன் ஆதி வருகிறாரா? அவர்கள் சொல்வது உண்மையா? ஆதியை எதிர்பார்த்திருக்கும் தாய் கோகிலாவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா? என்று நகர்கிறது இந்தக் குறுந்திரைப்படம்.நன்கு அறியப்பட்ட கதை என்றாலும் மிகவும் அழுத்தத்தை தரும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த அழுத்தத்திலிருந்து எம்மை விடுவித்துக்கொள்ளும் விதமாகவும் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளும் விதமாகவும் படத்தின் இறுதிப் பகுதி நகர்கிறது. அதுவே மனதில் பாரத்தை அகற்றி மனதை வெளிக்கச் செய்கிறது இந்தப் படம் எப்படி முடியப்போகிறது? ஆதியை கோகிலா சந்திப்பாரா என்ற கேள்விகள் படத்தை பார்க்கத் தூண்டும் விதமாக அழுத்துடன் அமைந்திருக்கின்றன.
வரும் பாத்திரங்களும், வசனங்களும், காட்சிகளும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. இந்தப் படத் தயாரிப்பு பற்றிய காட்சி ஒன்றை பார்த்த பின்னரே படத்தைப் பார்த்தேன். ஆனாலும் படத்தின் இயக்குனரோ, திரும்பத் திரும்ப ஆக்கப்படும் காட்சிகள் பற்றிய எண்ணமோ வராமல் கண்ணுக்கு முன்னால் நிகழும் ஒரு கதையாக மாத்திரமின்றி அக் கதைக்குள் நம்மையும் ஒரு பாத்திரமாக இழுத்துச் செல்லும் விதமாக கலையாகியிருக்கிறது உரு படம். தமிழீழ விடுதலைப் புலிகள் காலக் குறும்படங்களின் பின்னர் பார்த்த சிறந்ததொரு குறும்படமாக உரு படத்தையே சொல்வேன். எங்கள் மண்ணின் வாசனையும் எங்கள் திரையுல மரபையும் நினைவுபடுத்திய அற்புதமான படம் உரு – சிறு இனத்தின் பேருரு.