குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம் மூலம் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 585 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்காது சீன நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக தெரியவருகிறது. துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாகவே சீன நிறுவனம் இவ்வாறு பணத்தை நிறுத்தி வைத்துள்ளது.
உடன்படிக்கைக்கு அமைய களியாட்டு வலயம் ஒன்றை அமைக்க இணக்கம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக சீனாவின் மேர்ச்சன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. துறைமுகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தீவில் இந்த களியாட்ட வலயத்தை ஏற்படுத்துவது தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும் வரை செலுத்த வேண்டிய பணத்தை நிறுத்தி வைக்க சீன நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக பிரதேசம் இலங்கை துறைமுக அதிகார சபை சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதால், குறித்த இடம் கடற்படை மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் வரை இலங்கைக்கு வழங்க வேண்டிய பணத்தை சீன நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. பிரச்சினை முடிவுக்கு வந்த பின்னர் பணத்தை இலங்கைக்கு வழங்க சீன நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.