ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர்தான் தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையை முடிவு செய்யும் என அர்ஜென்டினா அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். 21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் எதிர்வரும் 14-ம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, ரஷ்யாவைச் சென்றடைந்துள்ளது. இந்நிலையில் ஸ்பெயின் நாளிதழ் ஒன்றுக்கு மெஸ்ஸி வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் நாங்கள் எவ்வளவு தூரம் செல்லப் போகிறோம், எப்படி முடிக்கப் போகிறோம் என்பதை பொறுத்துதான் தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கை அமையும் என அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கு பல்வேறு அணிகள் அதிக நம்பிக்கையுடன் வந்துள்ளன. அவை அணியின் ஒட்டுமொத்த திறன் மற்றும் தனிப்பட்ட வீரர்களின் திறன்களையும் எதிர்நோக்கி உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. அதே போன்று கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் 2015 மற்றும் 2106-ம் ஆண்டு சிலி அணியிடம் தோல்வி கண்டு இருமுறையும் கிண்ணத்தினை வெல்லும் வாய்ப்பை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
‘டி’ பிரிவில் இடம் பெற்றள்ள அர்ஜென்டினா அணி எதிர்வரும் 16-ம் திகதி தனது முதல் போட்டியில் ஐஸ்லாந்தை எதிர்த்து விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது