ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று தானேவில் உள்ள நீதிமன்றில் முன்னிலையாகின்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரத்தில் பேசிய ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் மகாத்மா காந்தியை கொன்று விட்டதாக தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ராகுல்காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட போதும் பின்னர் இந்த வழக்கை நேருக்கு நேர் சந்திக்க போவதாக ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்தவழக்கு மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பிவண்டி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் ராகுல்காந்தி நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு மீதான விசாரணை பிவண்டி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நேரில் முன்னிலையாவதற்காக ராகுல்காந்தி மும்பை வந்தடைந்துள்ளார்.