வடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிசியஸ் எதிர்வரும் 14ஆம் திகதி இதற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி ஒன்றை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நுண்நிதிக்கடன்கள் உதவியாக இருந்தாலும் அதனூடாக பல அசௌகரியங்களை பொது மக்கள் எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் நுண்நிதிக்கடன் செயற்பாடுகளினால் 59 இற்கும் மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றுள்ள அதேவேளை கிழக்கு மாகாணத்தில் 19 வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஐந்து மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் 53 தற்கொலை மரண சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக குளோபல் தமிழ் செய்திகள் செய்தி வெளியிட்டிருந்தது.
இதேவேளை நுண்கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் பொருட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப் பேரணிகளை முன்னெடுக்கவுள்ளதாக அன்ரனி கலிசியஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் விழிப்புணர்வுப் பேரணி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை நடைபெறவுள்ளது.
கடன்பொறிக்குள் சிக்கித்தவிக்கும் மக்கள் கடனை மீளச்செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் கால அவகாசத்தை வழங்குவதுடன், அதற்கான வட்டிகளையும் இரத்துச் செய்து மீளச்செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச்செலுத்த முடியாமல் வட்டிக்கு வட்டியும் எடுத்த கடன்தொகைக்கு மேலான தொகையை அறவிடுவதை நிறுத்தவேண்டும், நுண்கடன் நிதி நிறுவனத்தின் வட்டி வீதங்களைக் குறைக்க வேண்டும், அரச வங்கிகள் ஊடான கடன்களுக்கு நிபந்தனைகளை குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கிராம மட்டங்களில் இருக்கின்ற அமைப்புக்கள் ஊடாக கடன்களைப் பெறுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் முதலிய ஐந்து கோரிக்கைகளை இதன்போது வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.