குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வடக்கு மாகாண காணி அமைச்சின் அலுவலகம் கிளிநொச்சியில் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை அமர்வு கைதடியிலுள்ள பேரவை சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன் போது சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரும் பிரதி அவைத் தலைவருமான கமலேஸ்வரன் மாகாண காணி அமைச்சின் அலுவலகத்தை முல்லைத்தீவில் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்தோடு ஏற்கனவே மாங்குளத்தில் அமைக்கப்படுவதாகச் சொல்லப்பட்ட அலுவலகம் ஏன் இதுவரையில் அமைக்கப்படவில்லை என்றும் தற்போது அது வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர் கேள்விகளை மாகாண காணி அமைச்சரான முதலமைச்சரிடம் முன்வைத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எமது அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் மாகாண காணி அமைச்சின் அலுவலகம் மாங்குளத்தில் அமைப்பதற்கு திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அங்கு அலுவலகத்தை அமைப்பது குறித்தான நிலைமைகளும் ஆராயப்பட்டிருந்தது.
ஆதற்கமைய அங்கு நீர் வசதி உள்ளிட்ட ஏனைய பல வசதிகளையும் கருத்திற் கொண்டு அந்த அலுவலகத்தை கிளிநொச்சியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறியிருந்தார். இதன் போது குறுக்கிட்ட கமலேஸ்வரன் அங்கு நீர் இல்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிட்டார்.
ஆயினும் அதற்கும் பதிலளித்த முதலமைச்சர் எங்கு எந்த அமைச்சு அலுவலகம் அமைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்து நிபுணர்களும் துறைசார் அதிகாரிகளும் ஆராய்வுகளை மேற்கொள்வார்கள். அவ்வாறு அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளினடிப்படையில் எனக்குத் தெரிவிக்கப்பட்ட தரவுகளையே நான் இங்கு கூறுகின்றேன்.
மேலும் தற்போது அந்த அலுவலகத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய வெகு வரைவில் அந்தப் பணிகளை ஆரம்பிக்க இருக்கின்றோம் என்றார் முதலமைச்சர்.
இதே வேளை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அலுவலகங்கள் அந்த அந்த இடங்களில் அமைக்கப்பட வேண்டுமென கமலேஸ்வரன் கோருவது நிர்வாக ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று அவைத் தலைவர் சிவஞானம் குறிப்பிட்டார்.