குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வடக்கு மாகாணத்தில் மத்திய அரசாங்கம் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்கின்றது. குறிப்பாக மாகாண சபையை புறந்தள்ளி தன்னுடைய திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள எத்தனிக்கின்றதாக வடக்கு கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இத்தகைய செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்பதுடன் நல்லாட்சியுமல்ல ஐனநாயகமுமல்ல எனக் குறிப்பிட்டிருக்கும் சர்வேஸ்வரன் அரசின் செயற்பாடுகளை அரசே மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
வடக்கு மாகாண சபையின் அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன் போது மத்திய அரசினால் உருவாக்கப்படுகின்ற மீள்குடியேற்றச் செயலணி மற்றும் வடக்கு அபிவிருத்தி குழு என்பன குறித்து கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்..
வடக்கு மாகாண அபிவிருத்தி என்பது மாகாண சபையும் மத்திய அரசும் இணைந்து பேசிச் செய்ய வேண்டும். அதனை விடுத்து மாகாண அரசைப் புறந்தள்ளி வெறுமனே மத்திய அரசாங்கம் தாம் நினைத்தது போன்று செயற்பட முடியாது.
இங்கு மாகாண சபை இருக்கின்ற போது எங்களுக்குத் தெரியாமலே மத்திய அரசு பல்வெறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அதனை ஊடகங்களில் பார்த்தே நாங்கள் அறிந்து கொள்ளும் நிலையும் இருக்கின்றது.
இவ்வாறு மத்திய அரசாங்கம் செயற்படுவதானது நல்லாட்சியும் அல்ல. அதுவொரு ஐனநாயகமும் அல்ல. ஆகவே மாகாண சபையைப் புறந்தள்ளி மத்திய அரசாங்கம் செயற்படுகின்றதை மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். ஆகவே மாகாண சபைக்குத் தெரியப்படுத்தி மாகாண சபையுடன் இணைந்தே மத்திய அரசாங்கம் வடக்கில் அபிவிருத்தியானலும் வேறு எதுவானாலும் செய்ய வேண்டுமென்றார்.
இதே வேளை மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்கிடையேயான அரசியல் போட்டி காரணமாகவே எங்களைப் பரித்துடைக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகின்றதாக உறுப்பினர் ஆ.பரஞ்சோதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாண அபிவிருத்தி எனக் கூறி யாழிற்கு வந்து ஒரு கூட்டத்தை நடத்திச் சென்றிருக்கின்றார். அதே போன்று சி.சு.க. தலைவர் மைத்திரிபால சிறிசேன வடக்கு அபிவிருத்திக்கென குழவை அமைத்துள்ளார். இவ்வாறு அவர்களுக்கிடையிலான அரசியலுக்கு எங்களைப் பலிகிடாவக்க முயல்கின்றார் என தெரிவித்தார்.