குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் நேற்று (12) செவ்வாய்கிழமை 12 ஆவது நாளாக இடம் பெற்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த பகுதியில் சூழ்ந்து கொண்டமையினால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணியில் களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும் இணைந்து விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரும் , களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டனர்.
இந்த அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டிருந்த நிலையில் நுற்றுக்கணக்கான மக்கள் அகழ்வு பணிகள் இடம் பெறும் இடத்தை சூழ்ந்து கொண்டதோடு,முழுமையாக மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகளை பார்க்க எத்தனித்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் கூடி நின்ற மக்களை அங்கிருந்து வெளியேற்றி நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று புதன் கிழமை(13) காலை 7.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 13 ஆவது நாளாகவும் ஆகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.