ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைதாகி விடுதலை செய்யப்பட்ட நிலையில் தமது போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 11ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர்.
உண்ணாவிரதம் நேற்று 3-வது நாளாக நடந்தது. அவர்கள் அனைவரும் சோர்வாக காணப்பட்டதுடன் 8 பேர் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் காவல்துறையினரின் தடைகளையும் மீற முதலமைச்சரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்துக்கூற கோட்டையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த போராட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒத்திவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது