கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரரை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவத்தில் சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளார். இவர் மஹாசென் ஆலயத்தின் பிரதான கப்புராளையான அசேல பண்டாரவெனவும், சந்தேகநபரின் வீட்டின் பின்புறமிருந்து, கைக்குண்டுகள் பத்தும் கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள காவற்துறையினர், சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் நலனை விசாரிப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தேரரின் சிசிச்சைகளுக்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் வழங்கப்படுமென புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேரரரை இரத்மலானையிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு சென்று, மீண்டும் நாரஹேன்பிட்டியவுக்கு இராணுவ விமானம் மூலம் கொண்டு செல்ல ஏழரை இலட்சம் ரூபாய் செலவாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரருக்கு நேற்று இரவும் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவரது தலையில் சிதைவடைந்த ரவைகள் இருப்பதாகத் தெரிவித்தே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.