Home இலங்கை இணுவையூர் தியாகராஜ சுவாமிகளும் நூற்றாண்டை நோக்கிய பார்வையும்…

இணுவையூர் தியாகராஜ சுவாமிகளும் நூற்றாண்டை நோக்கிய பார்வையும்…

by admin

இணுவையூர் கார்த்தியாயினி கதிர்காமநாதன்
சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து..

கடந்த மே மாதம் பத்தொன்பதாம் திகதி தியாகராஜ சுவாமிகளின் நூற்றாண்டு தினமாகும். அதனை நினைவு கூரும் வகையில் அந்த நூற்றாண்டு விழா மலருக்கு எழுதிய கட்டுரை
ஞான பரம்பரையினூடாக இணுவிற் சமயநிலையும் தியாகராசா  சுவாமிகளும்.

‘சீPராரும் கன்னல் செறி வாழை கமுகு புடைசூழ் கழனி துன்னும் இணுவில்’ எனக் கைலாயமாலையிற் சிறப்பித்துக் கூறப்பட்ட, வரலாற்றுச் சிறப்புப் பொருந்திய இணுவில், முத்தமிழின் உறைவிடமாகக் கலைகளின் இருப்பிடமாகக் கற்றோரும், கலைவாணரும், தெய்வச் சால்புடையவர்களும் வாழும் ஊராக மட்டுமன்றி, சைவத்தின் உறைவிடமாகவும் திகழ்கின்றது. இதற்குச் சான்று பகரும் வண்ணம், ஆரியச்சக்கரவர்த்திகளின் சிம்மாசனப் பெயர்களைக் கொண்ட இணுவிற் பரராசசேகரப்பிள்ளையார் கோயில், செகராசசேகரப்பிள்ளையார் கோயில் ஆகியனவும் அவர்கள் காலத்திலேயே வழிபாட்டுத் தலங்களாக இருந்த இணுவிற் சிவகாமியம்மன் கோயில், இணுவில் கிழக்கு எல்லையிலுள்ள கருணாகரத் தொண்டமானாற் கட்டப்பட்ட கருணாகரப்பிள்ளையார் கோயில் ஆகியனவும், அவர்கள் காலத்தில் வாழ்ந்த கைலாயநாதன் இறை நிலை எய்திய பின் எழுந்த இணுவில் இளந்தாரி கோயில், ‘நொச்சியொல்லைக்கந்தன்’ என்று அழைக்கப்பட்ட இணுவிற் கந்தசுவாமிகோயில், பல ஞானிகளும் சித்தர்களும் வாழ்ந்த, நடமாடிய, அவர்களாலேயே பஞ்சவடிநிலை, பஞ்சவடிதீரம் என்று சிறப்பித்துக் கூறப்பட்ட இணுவிற் காரைக்காற் சிவன் கோயில், பெரிய சன்னாசியார் வாழ்ந்த மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில் ஆகியவற்றோடு, தற்போது இருபத்தைந்திற்கும் மேற்பட்ட ஆலயங்களைத் தன்னகத்தே கொண்டு சைவத்தின் செழிப்பை உணர்த்தும் ஓர் கிராமமாக இணுவையம்பதி திகழ்கின்றது.

ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை, அவர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, சமயம், அரசியல் போன்ற பாரம்பரிய வரலாற்று அம்சங்களை ஆராயப் புகுந்தால் அதில் யாழ்ப்பாண அரசும், யாழப்பாணத் தமிழர்களின் வாழ்வியல் அம்சங்களும் மிக முக்கியமானதொரு இடத்தினை வகிக்கும் என்பது வரலாற்றாசிரியர்களின் துணிபு. இந்த வகையிற் சில கிராமங்களும் முக்கிய இடத்தினை வகிக்கும் அதில் இணுவிற் கிராமமும் அடங்கும்.

சிவயோகி ஞானி செறிந்த அத்தேசம்
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவயோகம் கைகூடு நல்லியல் காணும்
பவயோகம் இன்றிப் பரலோகமாகுமே. – திருமந்திரம்.

சிவன் திருவடியை மறவா நினைவுடையோர் சிவயோகியாவார். சிவன் நினைவில் அழுந்தித் தற்செயலற்றுச் செய்வன எல்லாம் சிவன் செயல் என்று எண்ணுபவன் சிவஞானியாவான். அத்தகைய சிவயோகிகளும் ஞானிகளும் வாழ்ந்து பரலோகமாக வழமூட்டிச் சென்ற சிவபூமியாகத் திகழ்கின்றது இணுவை என்னும் திருவூர்.

இவ்வூரின் அருள் வாழ்விற்குச் சமயவாழ்விற்கு ஞானபரம்பரைக்கு வித்திட்டவர் காலிங்கராயன் மகன் கைலாயநாதன் ஆவார். இணுவையூர் சின்னத்தம்பிப்புலவரின் வாழ்க்கையை ஆய்வு செய்த போது இவர் வாழ்ந்த காலம் பதின்மூன்றாம் பதின்னான்காம்; நூற்றாண்டாக இருக்கலாம் என எண்ணுவதற்கு இடமளிக்கின்றது.
‘தென்பாண்டி மாறனுக்கு மந்திரியாய்
இலங்கையை ஆண்ட காலிங்கராயன்
மகன் கைலாயன்’

‘தென்னிலங் காபுரத் திருமகட் கணியாய்
அட்டலட் சுமியுறைந் தருளும் யாழ்ப்பாணப்
பட்டினந் தன்னிற் பரராச சேகரன்
என்னுமா ரியர்குலத் திறையர சிருந்த
தென்னிணுவை யென்னுந் திருநகருறைவோன்
பருக்கோவ லிளமுலைப் பார்ப்பதி தாசன்
திருக்கோவலூரெனுந் திருநகருடையன்
ஓராயிரங்கதி ரோங்கெழின் மெய்யான்
பேராயிரன்குடிப் பேரதிகார
பரராசரும் புகழ் பருமணித் தடக்கை
யோரா சனத்தி லிரவியா யுதித்தோன்
ஆலிங்க னாதி யகற்றுமெய் யருள்புரி
காலிங்க ராச கருணையந் திருமால்’

என்னும் சின்னத்தம்பிப் புலவரின் பாடல் வரிகள் இதற்குச் சான்று பகரும் வண்ணம் உள்ளன. இவர் ஒரு அரசனாக, ஞானியாக, சித்தனாக, தெய்வமாக, இளந்தாரி என்ற பெயரில் இணுவிலின் காவலனாகப் போற்றப்படுகின்றான்.
‘அக்கணிச் சடைமுடி அண்ணறன் னருளால்
திக்கெலாம் வியக்கத் தேவுருவாகி
கிழந்தானோர் போதினும் கிட்டுறாமையினால்
இளந்தாரி என்னும் இயற்பெயர் தாங்கி’

என்பது சின்னத்தம்பிப்புலவரின் பாடல். இளந்தாரி வழிபாடு இணுவிலுக்கே உரிய சிறப்பு வழிபாடாகும். கைலாயநாதனுடன் ஆரம்பமாகும் இச்சித்தர் பரம்பரை இணுவிலிற் சுப்பிரமணிய சுவாமிகள் மூலம் விளக்கமுறுகின்றது. இணுவிற் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமைக்குரிய அழகிய அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய உலகப் பெருமஞ்சம் உருவாகக் காரணமான இவரைப் பெரிய சன்னாசியார் என ஊர் மக்கள் அன்போடு அழைக்கின்றார்கள். இவர் வாழ்ந்த காலம் ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த 1860-1917 வரையுள்ள காலப்பகுதியாகும்.

சுப்ரமணியர் என்ற இயற் பெயர் கொண்ட ‘பெரிய சன்னாசியாரின் வாழ்வு பரந்து பட்டது. பல துறைகளிலும் அவரின் அருளாட்சி நடைபெற்றது. கோயிற் திருப்பணி, இலவச வைத்தியப்பணி, வினை தீர்க்கும் அருட்பணி போன்றவற்றுடன் நாட்டுக்கூத்து, காவியப்படிப்பு, புராணப்படிப்பு ஆகியவற்றின் மூலம் இயல், இசை, நாடகங்களான முத்தமிழையும் வளர்த்தார். அன்னார் வாழ்ந்த மஞ்சத்தடி அருணகிரிநாதர் கந்தசுவாமி கோயிலும் அவர் தவம் செய்த இணுவிற் கந்தசுவாமி ஆலயமும் ஒரு காலத்திற் புராணங்களிற் கூறப்பட்ட கைலயங்கிரி போன்று காணப்பட்டது. இங்கு நடைபெறும் சமய நிகழ்வுகளும், சமயம் சார்ந்த கொண்டாட்டங்களும் இணுவை மக்களின் வாழ்க்கையை அன்பும், அறனும், பண்பும் பயனும் உடைய வாழ்க்கையாகச் செழுமைப்படுத்தியது. பரமசிவனைச் சேவிக்கும் நந்தியும், தும்புரு நாரதரும் மற்றும் கலைப்பணி புரியும் தேவகணங்களும் போன்று, அருட்குரவர் இணுவையூர் அப்பர் பெரிய சன்னாசியாரைச் சூழ்ந்து, அருட்பணி புரியும் தொண்டர்களும், கலைஞர்களும் இருப்பர். இராமநாடகம், கோவலன் கதை, வள்ளி திருமணம், அரிச்சந்திரன், சத்தியவான் சாவித்திரி, மயிலிராவணன் கதை போன்ற நாட்டுக் கூத்துகளை இயக்கியதன் மூலமும் பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், திருமுறைகள் என்பவற்றை ஓதல், ஓதுவித்தல் மூலமும் மக்கள் வாழ்விற் புத்துணர்வை ஊட்டினார். வாழும் வகையினைத் தானே வாழ்ந்து காட்டினார். பின் நிகழும் நிகழ்வுகளை முன் கூறும் ஆற்றல் படைத்த பெரிய சன்னாசியார் மக்களின் உடல், உளப் பிணிகளை நீக்கும் அருட்குரவராகத் திகழ்ந்தார். இதனாற் பெரிய சன்னாசியார் இணுவையின் அப்பராகவும், அவரின் கூற்றுக்கள் மந்திர மொழிகளாகவும் இணுவை மக்களால் ஏற்றிப் போற்றப்பட்டன.

பெரிய சன்னாசியாரின் அருள் நோக்காலும் ஆசியினாலும் இவரின் திருத்தொண்டர்களில் ஒருவரான சன்னாசி கந்தர் (காசிநாதர்) சின்னக்குட்டி தம்பதிகள் கருவிலே திருவுடையதோர் ஆண்மகவைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு வடிவேலன் என்ற திரு நாமத்தையும் பெரிய சன்னாசியாரே சூட்டியருளினார். இவரே இணுவிலின் ஞானசம்பந்தராகவும் கிளிநொச்சி உருத்திரபுரம் மகாதேவ ஆச்சிரமத்தின் ஸ்தாபகரும் தலைவருமாக விளங்கிய வடிவேற்சுவாமிகள். இவர் வாழ்ந்த காலம் 1906 – 1990 வரையுள்ள காலப்பகுதியாகும். இவர் சிவயோக சுவாமிகளையே தனது ஞானகுருவாக ஏற்றுக் கொண்டவர்;;. யோகசுவாமிகளின் அறிவுறுத்தலின்படி அவரின் அதி உத்தம சீடரான மகாதேவசுவாமிகளிடம் தீட்சை பெற்று முதன்மைச் சீடராக விளங்கியவர். உள்ளத்தினை ஈர்க்கும் ஆளுமைப் பொலிவும், அருட்பொலிவும், தத்துவஞான அறிவும் ஒருங்கமையப் பெற்றவர். இனிய சாரீரம் கொண்ட இவர் இளம் வயதிலிருந்தே பழைய பண்முறை பிறழாது திருமுறைகளை ஓதல், கதாப்பிரசங்கம் செய்தல் ஆகியவற்றில் மிகுந்த நாட்டம் கொண்டவர். திருமுறைகள் வேதவாக்குகள் என்பதையும், சக்தி நிறைந்தவைகள் என்பதையும் ஞான குருவான யோகர் சுவாமிகளிடம் இருந்து கற்றுணர்ந்து கொண்டவராகையால் பண்ணிசை வகுப்புகளை முறை தவறாது நடாத்தித் திருமுறைகளின் சிறப்பினைப் பேணியவர். இசையால் உள்ளத்தினை உருக்கும் ஆற்றல் கொண்டவர். திரு சங்கர சுப்பையர், நாகலிங்கப் பரதேசி ஆகியோரின் பின் ஈழத்திற் பக்திச் சுவை மீதூர இசையுடன் கதைகளை விளக்கிச் சொல்வதில் வல்லவர்’;. (‘இணுவை அப்பர்’ பண்டிதர் இணுவையூர் கா.செ.நடராசா) இவரின் பணியினால் இணுவிலின் இளம் சந்ததியினர் பலர் வளம்மிக்க புகழ் கொண்ட வாழ்வு பெற்றனர். அதில் நானும் ஒருவன் என எனது தந்தையார் அவர்கள் பல தடவைகள் கூறிப் பெருமைப்பட்டுள்ளார்.

யோகர் சுவாமிகளுடனான தனது அனுபவத்தினை வடிவேற்சுவாமிகள் பின்வருமாறு பதிவு செய்கின்றார். ‘ஒருநாள் கோண்டாவில் உப்புமடம் விநாயகர் ஆலயத்தின் முன் ஓர் திருக்கல் வண்டியில் சுவாமிகள் வந்தார்கள். சிறு பிள்ளைப்பருவம் ஆதலால் நான் அவர் வண்டியிற் பிடித்தவண்ணம் வண்டியோடு சேர்ந்து ஓடினேன். வண்டியைச் செலுத்திய அன்பர் ‘தம்பியையும் வண்டியில் ஏத்துவோமா’ என்றார். அதற்குச் சுவாமிகள் ‘இல்லை அவன் ஓடியே வரட்டும்’ என்றார்கள்;. வண்டியும் மருதனார்மடச் சந்திக்குச் சென்று நின்றது. வண்டியை விட்டிறங்கி என்னை அரவணைத்து ‘இவனுக்கு ஞானம் சொல்லிக் கொடுப்போம்’ என்று கூறிச் ‘செல்வ நெடுமாடம்’ என்ற சம்பந்தர் தேவாரத்தைப் பாடச்சொன்னார்கள்;. நான் அத்தேவாரத்தைப் பாடியதும், முன்னாலிருந்த இராமநாதன் கல்லூரியின் உயர்ந்த கோபுரங்களைக் காட்டி ‘இதுதான் நீ காண விரும்பும் சிதம்பரம்’ என்றார்கள்;. (இணுவில் இராமநாதன் கல்லூரி மேன்மாடத்திற் சு. நடேசன் அவர்களாற் சிதம்பரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவகாமி அம்பாள் சமேத சிதம்பர நடேசப் பெருமான்; கோயில் கொண்டருளுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.) சிதம்பர தரிசனம் பெற வேண்டும் என்றிருந்த எனது நினைவு சுவாமிகளுக்கு எப்படித் தெரிய வந்தது என்று திகைத்து நின்றேன். அப்போது அவர் ‘இடேய் நான் உன்னுள்ளே இருக்கின்றேன்’ என்றார்கள். என்னை அறியாமல் அழுது விட்டேன். பின்பு என்னையும் அழைத்துக் கொண்டு அண்மையில் இருந்த மயில்வாகனம் உபாத்தியாயரின் அறைக்குச் சென்றார்கள். அங்கு ஓர் சாய்மனைக் கதிரையில் அவர் இருந்து கொண்டு எனது இரு கரங்களையும் பற்றித் தமது அண்டையிலிருத்திச் சிற்றுண்டி, தேனீர் அருந்திய பின் ஓர் காகிதத்தில் ‘மூலா நிலமதில் – முந்து தமிழ் மாலை’ என்ற இரு திருப்புகழ்களை எழுதித் தந்து பாடச் சொன்னார்கள். எமக்கியன்ற இராகத்திற் பாடினேன். சுவாமிகள் எழுந்து ஆனந்த நர்த்தனம் செய்தார்கள். அத்துடன் ‘இனிமேல் நீ சாத்திரங்கள் நன்கு படிக்க வேண்டும். அதற்கேற்ற ஆசானும் கிடைப்பார் போ’ என்றருளினார்கள். இதுவே எமது வாழ்வில் முதன் முதலாக யோகர் சுவாமிகளைத் தரிசித்த சந்தர்ப்பம். எனது ஞான தேசிகனிடத்துச் சாத்திரங்கள் பயிலும் நாட்களில், சில சந்தேகங்கள் என்னுள்ளத்தில் எழும். சுவாமிகள் மருதனார்மடம் செல்லும் மார்க்கத்தில் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் தாமாகவே என் மனதில் உள்ள சந்தேகங்களுக்குப் பதில் கூறியருளுவார்கள். ஒரு நாள் தெய்வநியதி சக்தியைப் பற்றிச் சிந்தித்து வந்தேன். வழியிற் சந்தித்த சுவாமிகள் ‘பனையில் தேங்காயும் தென்னையில் பனங்காயும் காய்ப்பதில்லை. இது தான் அந்த நியதிசக்தி. இது போல் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார். நீ என்றொரு பொருளோ நான் என்றொரு பொருளோ இல்லை. எல்லாம் சிவவடிவம்’ என்று கூறி ஒரே சிரிப்பாகச் சிரித்துவிட்டுச் சென்றார்கள். இவ்வுலகம் நாத வடிவானது என்பதற்கு வாழ்க்கையில் நிகழும் ஒவ்வோர் நிகழ்ச்சியிலிருந்தும் விளக்கம் தருவார்கள்.’ (‘எங்கள் யோகசுவாமிகள்’ வடிவேற்சுவாமிகளின் கட்டுரை 1964. 4. 3 ஆத்மஜோதி இதழ்)

இத்தகைய பெருமகனாரைப் பல அடியவர்களும், ஞானிகளும் தேடிவந்து அவருடன் உறவு பூண்டனர். அவர்களுள் நயினாதீவுச் சுவாமிகள் என வழங்கும் முத்துக்குமார சுவாமிகளும் ஒருவர். இவர் இணுவிற் பரமானந்தவல்லி அம்மன் ஆலயக்குடிலிற் தவயோகம் செய்தவர். காரைக்காற் சிவன் கோயில் சிதைவடைந்திருந்த காலகட்டத்தில் அருட்திரு யோகர் சுவாமிகளுடனும், வடிவேற்சுவாமிகளுடனும் இணைந்து மீண்டும் காரைக்காற் சிவன் கோயில் உயர்வடையச் சேவை புரிந்தவர். அவரின் தொடர்பு இணுவை மக்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. ஞானகுருவான யோகர் சுவாமிகளின் அருள் வாக்கிற்கு இணங்கி 1952 இல் கிளிநொச்சி செல்லும் வரை வடிவேற் சுவாமிகளின் அருட்பணி இணுவிலின் பக்தி நெறிக்கு, சமய வாழ்விற்கு வளம் சேர்த்துள்ளது.

இத்தகைய சித்தர்களின் ஞானிகளின் அனுபவம், ஆற்றல், தவத்தினாற் பெற்ற இறையருள், அஷ்டமா சித்திகள், உயர்ந்த சிந்தனை, தூய்மையான எளிய வாழ்க்கை முறை, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காது நன்மைகளைச் செய்யும் தன்மை ஆகியனவும், அவர்களுடைய பேச்சு, செயல், சிந்தனை ஆகியவை ஏற்படுத்திய அதிர்வுகளும் அவர்கள் வாழ்ந்த, இன்றும் சூட்சுமமாக வாழ்கின்ற இணவையம்பதியைத் தெய்வீகப் பொலிவுடன் விளக்கமுறச் செய்கின்றன.


பெரிய சன்னியாசியாரின் தொண்டர்களில் முக்கியமான இன்னொருவர் தேவாரச் சின்னப்பர். இவர் பண்ணிசையுடன் திருமுறைகளை ஓதுவதோடு தம்மை நாடி வந்தவர்களுக்குத் திருமுறைகளைப் பயிற்றுவித்தும் வந்ததாற் தேவாரச் சின்னப்பர் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றார். இவரின் உறவினராகிய அம்பலவாணச்சுவாமிகள் புராண இதிகாசங்களுக்குப் பயன் சொல்வதிலும் சமயச் சொற்பொழிவு ஆற்றுவதிலும் வல்லவர். இவரின் சமாதிக் கோயில் இணுவிற் சிவன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. இவரின் மற்றொரு உறவினர் பொன்னம்பலம் சுவாமியார் என இணுவை அப்பர் என்ற நூலில் எனது தந்தையார் பண்டிதர் கா.செ.நடராசா குறிப்பிட்டுள்ளார். இவர்களைத் தவிர இணுவிற் சிவன் கோவிலுக்கு அருகே உடையார் சுவாமிகள் என்று அழைக்கப்படும் சச்சிதானந்த சுவாமிகள், மாரிமுத்து சுவாமிகள், நடராஜ முனிவர் ஆகியோர் சமாதிக் கோயில்களும் அமைந்துள்ளன. இவர்கள் அனைவரும் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்களுடைய அருள்வாழ்க்கை தொடர்பான தகவல்களை மிகுந்த சிரமத்துடன் தேடியும் யாரிடமும் எங்கும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. நடராச முனிவர் சமாதிக் கோயில் காரைக்காற் சிவன்கோயிலின் அருகேயும் அமைந்துள்ளது. இவர் காரைக்காற் சிவன் கோயிற் சூழலில் இருந்து தவம் செய்தவர் எதிர் கால நிகழ்வுகளை அறியும் வல்லமை பெற்றவர் என்பதைத் தவிர இவரைப்பற்றிய குறிப்பை எங்கும் காணமுடியவில்லை.

ஆறுமுகநாவலரின் மாணாக்கர்களுள் சிறந்தவரான நடராசஐயர் ‘இவர் 1840 களில் இணுவில் என்னும் கிராமத்தில் அந்தணர் குலத்திற் பிறந்தவர். இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த சாத்திரங்களையும் ஆறுமுக நாவலரிடம் கற்றவர். சித்தாந்த சாத்திரங்களிற் பாண்டித்தியம் பெற்றவர். சிதம்பரம், மதுரை முதலிய சிவத்;தலங்களிலே பல நாட்கள் வசித்தவர். அங்கும் இங்கும் பலருக்குச் சித்தாந்த சாத்திரங்கள் படிப்பித்தவர். சோதிடம், மந்திரம், வைத்தியம், யோகம், வடமொழி ஆகியவற்றிற் பாண்டித்தியம் பெற்றவர். கவிபாடும் திறன் பெற்றவர். தற்புகழ்ச்சி, தருக்கு தலையெடுப்பு முதலிய தீய குணங்கள் இல்லாதவர். சிவஞான சித்தியார் சுபக்கம் ஞானப்பிரகாசர் உரையை ஆராய்ந்து அச்சிற் பதிப்பித்துள்ளார்’ என்று ‘ஈழநாட்டுப் புலவர் சரிதம்’ என்ற நூலிற் கணேசையர் குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 104)

இணுவிலின் சமயச் செழுமையிலும் மக்களின் வளமான வாழ்வியலிலும் நடராசஐயருக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. கொடிய நஞ்சினை நீக்கும் ஆற்றல் உள்ளவர். இணுவிலின் ஆன்மீக ஒருமைப்பாட்டிற்குப் பாதுகாப்பளித்தவர். இவரது பரம்பரையில் வந்த அந்தணப் பெருமகனாராகிய மார்க்கண்டேயரும் பெரியசன்னாசியாருடன் வாழ்க்கையிலும், சமயப்பணிகளிலும் இணைந்து கொண்டு இணுவிலின் ஆத்மீக ஒருமைப்பாட்டிற்குப் பாதுகாப்பளித்தவர் ஆவார்.

‘இன்று பலராலும் போற்றப்படும் கூட்டுவழிபாட்டியக்கம் பெரிய சன்னாசியாரின் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டது. இக்கூட்டு வழிபாட்டினைத் தனது தவக்குடிலிலேயே அமைதியுடன் நடாத்தி வந்தார். அவராற் தொடங்கப்பட்ட கூட்டு வழிபாடு சமயப்பணி;, கோயிற் பணி ஆகியன வடிவேற்சுவாமிகளாற் போற்றி வளர்க்கப்பட்டது. வடிவேற்சுவாமிகளின் பின் இப்பணியினை சண்முகம் சுவாமியார், சுப்பராயர் ஆகியோரும், இவர்களின் வேதபரம்பரையில் வந்த சதாசிவச் சட்டம்பியார், செல்லையா சுவாமிகள் ஆகியோரும் பின்னர் சித்தாந்தப் பரம்பரையில் வந்த சோதிடப் பேராசான் சைவசித்தாந்தச் செம்மல் இணுவை சேதுலிங்கச் சட்டம்பியாரும் செய்து வந்தனர். உண்மையில் ஈழநாட்டில் கூட்டு வழிபாட்டியக்கத்தினைத் தோற்றுவித்து வளர்த்தவர்கள் மேற்குறிப்பிட்ட பெரியார்களே. இவர்களோடு ஒப்ப வைத்து எண்ணத்தகும் பெருமைக்குரியவர் சைவச் சான்றோராகிய தி.சி.ஆறுமுகதாசர். இவர்களின் தொடர்பினால் கூட்டு வழிபாட்டியக்கத்தினை இலங்கை வானோலி மூலம் பரப்பிப் புகழ்கொண்டவர் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரியார் திருவிளங்கம் ஆவார்’. (‘இணுவை அப்பர்’; பண்டிதர் இணுவையூர் கா.செ.நடராசா)

இந்த வகையிற் சித்தாந்தப் பரம்பரையிற் தன்னை இணைத்துக் கொண்டு, பெரியசன்னாசியார் வடிவேற்சுவாமிகள் வழி நின்று, கூட்டு வழிபாட்டு இயக்கத்தினை நல்ல முறையில் நெறிப்படுத்தி வளர்த்தவர் திரு வை. தியாகராசா சுவாமிகளாவார். பெரியசன்னாசியார், வடிவேற் சுவாமிகள் ஆகியோர் தாம் வாழ்ந்த காலத்தில் இணுவிற் சிவகாமி அம்மன் கோயில், மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில் (சிவசுப்ரமணியர் சுவாமிகள் கோயில்), இணுவிற் பரமானந்தவல்லி அம்மன் கோயில், இணுவில் நொச்சியொல்லைக் கந்தன் கோயில் ஆகியவற்றிற் சித்தாந்த வகுப்பு, திருமுறை வகுப்புகளை நடாத்தியும், தினமும் சாயங்காலப் பூசையின் பின் கூட்டு வழிபாட்டினை நடாத்தியும் வந்ததன் பயனாக இணுவிற் சூழலில் வாழ்ந்த அனைவரும் தினமும் அவற்றை அகம் குளிரச் செவிமடுத்தே வளர்ந்து வந்துள்ளனர். இதனால் இணுவிலிற் பிறந்த பலர் இயற்கையாகவே பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தனர். அவர்களுட் தியாகராசா சுவாமிகளும் அவரது சகோதரர்களான அம்பலம், சின்னராசா, சிவஞானம், அருளம்பலம், ஆகியோரும் அடங்குவர். இவர்களுட் சிவஞானம் அவர்கள் இந்தியா சென்று முறைப்படி மிருதங்கம் பயின்று வந்து கச்சேரிகள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கையாகவே இனிய சாரீரமும், உச்சஸ்தாயியில் இனிமையாகத் திருமுறைகளையும், திருப்புகழையும் பாடும் வல்லமை கொண்ட தியாகராசா சவாமிகளைத் திருப்புகழ் சுவாமி என்றும் இணுவை மக்கள் அழைத்தனர். இவர் பாடசாலை சென்று கற்கவில்லை. கொக்குவில் ஞானபண்டிதர் நடேசபிள்ளையிடம் சமயத்தையும், ஆன்மீகம் தொடர்பான பல விடயங்களையும் கற்றுக்கொண்டார். தந்தையார் வைத்திலிங்கம் இவருக்கு இட்ட பெயர் தில்லை நடராசா என்பதாகும். தனது தந்தையாருடன் விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டும், சுருட்டுத் தொழில் செய்து கொண்டும் மாலை வேளைகளிற் கூட்டுப் பிரார்த்தனைகளுக்கும் சென்று வந்தார். இவர் வாழ்ந்த சூழலும் இவரிடம் இருந்த கடவுள் பக்தியும் தன்னை முழுமையாக இறைபணிக்கு அர்ப்பணிக்கின்ற ஒரு தன்மையை இயல்பாகவே உருவாக்கிவிட்டது. இதனாற் தனது பெயரையும் தியாகராசா என மாற்றிக்கொண்டார். இறை தியானத்தில் ஈடுபடுவதும், தம்மை நாடி வரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களுக்கு விபூதி இட்டு, இறையாசிகளைக் கூறி அவர்களின் மனத்தில் அமைதியை ஏற்படுத்துவதைத் தனது நித்திய கடமையாகச் செய்து வந்தார்.

திருமணமாகியதும் சுவாமிகள் காரைக்காற் சிவன் கோயிலுக்கு அருகிலேயே தமது இல்லத்தை அமைத்து அங்கு தனது மனையாளுடன் வாழ்ந்;து வந்தார். அவரது இல்லம் துறவிகள் ஆச்சிரமமாகவே விளங்கியது. 1958 ஆம் ஆண்டிலிருந்து இவரது தலைமையிலான கூட்டு வழிபாட்டு இயக்கத்தினர்; பஜனை பாடுதல், இறையுணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்துதல் என்பதனையும் தாண்டிக் கோயிற் திருப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர். அதன் ஒரு அங்கமாகத் தியாகராசா சுவாமிகள் தமது கூட்டு வழிபாட்டு இயக்கத்தினருடன் அயலூர்களுக்கும் சென்று பஜனை பாடி, நிதியை மக்களிடம் நன்கொடையாகப் பெற்றுத் தம் மருமகன் மதியாபரணத்தின் உதவியுடன் உருவாக்கியதே சிவகாமியம்மன் ஆலயத்தின் அழகிய தேராகும். சிவகாமி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விசேட உற்சவங்களுள் ஒன்றான நவராத்திரி விழாவின் இறுதி நாளாகிய விஜய தசமியில் நடைபெறும் மானம்பூ உற்சவத்திலன்று வாழை வெட்டிற்காக சிவகாமி அம்பாள் ஊர்வலமாகக் கந்தசுவாமி கோவிலுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போதும் தியாகராசா சுவாமிகள் தன் கூட்டு வழிபாட்டியக்கத்தினருடன் 1958 ஆம் ஆண்டிலிருந்து பஜனை பாடி வந்துள்ளார்.

1965 ஆம் ஆண்டில் நல்லூர்த் தேர்த்திருவிழாவிற்கு நயினாதீவில் இருந்து தனது கூட்டு வழிபாட்டியக்கத்தினருடன் பஜனை பாடியபடி பாதயாத்திரை செய்தார். இதனைக் கண்ணுற்ற ஆத்மஜோதி முத்தையா அவர்கள் இந்த நற்பணியை நிறுத்தாது தொடரும் வண்ணம் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய வேண்டுகோளிற்கு மதிப்பளித்த தியாகராசா சுவாமிகள் தனக்கு இயலுமான வரை அப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். அன்று அவர் தொடக்கி வைத்த நற்பணி அவர்வழி வந்தவர்களாலும், கூட்டு வழிபாட்டில் ஆர்வமுள்ள இணுவிலின் இளம் சந்ததியினராலும் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவர் வாழ்ந்த காலம் 1918 – 1990

சமயச் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கங்கள், திருமுறை பாராயணம், கூட்டு வழிபாடு போன்றவற்றைச் செய்வதற்கான அடிப்படை நோக்கம் இறை வழிபாட்டின் மூலம் மக்களை அறவழி நடத்திச் செல்லல். பிறசமயக் கவர்ச்சியில் மயங்காது இருத்தல். நெறி பிறழாது குடும்பங்களையும் சமுதாயத்தையும் சீரிய முறையில் வழி நடத்திச் செல்லக்கூடிய மனப்பக்குவத்தையும் தெளிவான சிந்தனையையும் மக்களுக்குக் கொடுத்தல். இளம் பருவத்தினரின் மனதில் இறை சிந்தனையினூடாக பண்பாடு, பாரம்பரியம், ஒழுக்கம் சார்ந்த உன்னதமான எமது வாழ்வியல் அம்சங்களைப் பதிய வைத்தல் ஆகியனவாகும். இந்த அடிப்படையிலே இணுவிலிற் சைவமும் அதன் வழிபாட்டு அம்சங்களும் ஓர் உன்னத நிலையிலேயே இருந்து வருகின்றது. இணுவிலின் வரலாற்றை, இணுவை மக்களின் வாழ்க்கையை உற்று நோக்குபவர்களுக்கு இது நன்கு புலப்படும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சின்னத்தம்பிப்புலவர் பாடிய பஞ்சவன்னத் தூதிற்; கூறப்படும் காலிங்கராயன், கைலாயநாதன் வாழ்ந்த ஆரியச் சக்கரவர்த்தி காலத்திலேயே இணுவிலில் ஆலயங்களிற் பூசைகளும் வழிபாடுகளும் நியமமோடு நடைபெற்றுள்ளன என்பதனை

‘காலிங்கராச கருணையந்திருமால்
எவ்வெலாத் திசையும் இனிதுவந் தேத்தச்
சைவநூல் நெறிமுறை தவறிடா தொழுகி
சுத்தமோர் பால்தயிர் தொகுவன சூழ
நித்தமா யிரர்க்கன நியமமோடளித்து
கன்னலிள மொழிச்சிவ காமசுந் தரிதிருப்
பொன்னடி யனுதினம் பூசனை புரிந்து’

என்ற சின்னத்தம்பிப் புலவரின் பாடலடிகள் உறுதிப்படுத்துகின்றன.

பல்லவர் காலத்திற் தமிழகத்திலே சைவம், வைணவம் என்பவற்றை வேற்றுச் சமயத்தவர்களின் தாக்குதல்களிலிருந்தும் காத்து, அவற்றை வளர்ப்பதற்கு நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்திப் பாசுரங்களைப் பாடியும், அற்புதங்களைச் செய்தும், தமிழ் உலகிற்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார்கள். மக்கள் பிற சமயக் கவர்ச்;சியில் மயங்காதிருக்கவும், தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவும் இவர்களுடைய அற்புதங்களும், பக்திப் பாசுரங்களும், பக்தி இயக்கங்களும் நல்ல உதவி புரிந்துள்ளன.

அதே போன்று ஈழத்தமிழர் வரலாற்றிலும் மக்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்கள் ஆட்சியின்போது கிறிஸ்தவ சமயக் கவர்ச்சியில் மயங்காது அன்னிய பண்பாட்டு மோகங்களிற் கவரப்பட்டு எம் பண்பாட்டை, ஆசாரங்களைச் சிதைக்காமலும், அழிக்காமலும் இருக்க, ஈழத்திற் தோன்றிய புலவர்கள் கோயில்கள் மீதும், கடவுளர்கள் மீதும், கிரியைகளை விளக்கியும் புராணம், அந்தாதி, ஊஞ்சல், பதிகம், தூது போன்ற இலக்கியங்களைப் பாடியுள்ளனர். அவர்களுள் இணுவையூர் சின்னத்தம்பிப் புலவர் ஒருபடி மேலாக நின்று, அவரை ஒல்லாந்தர்கள் சிறையிலிட்டபோது நக்கீரர், நாவுக்கரசர் முதலானோர் மரபிலே வந்தவராக, இணுவிற் சிவகாமியம்மன் மீது மறியற் கொச்சகத்தை பாடியுள்ளார், இணுவையூரின் ஞானபரம்பரையினரோ தம் அருட்பணியாலும், அறப்பணியாலும், குருத்துவப்பணியாலும், கூட்டு வழிபாட்டியக்கத்தினாலும் இணுவை மக்களின் வாழ்க்கையில் ஊறிய சமய கலாசாரப் பாரம்பரியத்தை, மொழிப்பற்றை, வாழ்வியல் அம்சங்களின் தனித்துவத்தைப் பேணிப்பாதுகாத்துள்ளனர் என்று கூறுவது சாலப் பொருந்தும்.

அன்னியராட்சியின் போது, இணுவிலில் உள்ள மக்கள் மதம் மாறியதாக வரலாற்றுக் குறிப்புகளோ சான்றுகளோ இல்லை. இங்கு கிறிஸ்தவ தேவாலயங்களோ அன்றி மிஷநெறிப் பாடசாலைகளோ அமைக்கப்படவில்லை. ஆலயங்கள் இடிக்கப்பட்டுச் சைவ சமய வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட போதும் இணுவில் மக்களின் தனித்துவத்தை மொழிப்பற்றைச் சமய ஈடுபாட்டைச் சிதைக்க முடியவில்லை. இணுவில் மக்கள் தம் வழிபாட்டைக் கிணற்றடியிலும், மரத்தடியிலும் வைரவர் சூலங்களை நட்டு, அவற்றைச் சுற்றிக் கற்களை அடுக்கி மறைவாக வழிபட்டு வந்துள்ளனர். அந்நியர் ஆட்சியின் பின் மீண்டும் இணுவிலில் ஆலயங்கள் கட்டப்பட்ட பின்னரும் கூட எங்களுடைய காலத்திலும் இவ்வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. புளியடி வைரவர், விளாத்தியடி வைரவர், கிணற்றடி வைரவர் என்று, நான் சிறுமியாக இருந்த காலத்தில் இவ்வழிபாடுகளை இணுவிலிற் பார்த்து இருக்கின்றேன். எனது தந்தையார் பிறந்த இல்லத்து வீட்டுக் கிணற்றடியில் இவ்வாறான வைரவர் சூலம் வழிபாட்டிற்குரியதாக இருந்துள்ளது. நான் அறிய இணுவிலில் இருந்த பெரும்பான்மையான கிணற்றடிகளில் இந்த வைரவர் சூலம் வழிபாட்டுக்குரியதாக இருந்து வந்துள்ளது. வீட்டிலுள்ள பெரியவர்கள் தாம் குளித்து ஈர உடையோடு அந்த வைரவருக்கும் அபிஷேகம் செய்து வழிபடுவர். விசேட தினங்களிற் குடும்பத்தவர் எல்லோரும் கூடிப்; பொங்கலிட்டும் படையலிட்டும் வழிபட்டு வந்துள்ளனர்.

மீண்டும் ஒரு கொடிய யுத்தம்! வரலாறு காணாத அளவிற்கு ஈழத்தமிழர்களின் அடையாளங்களை எல்லாம் நசுக்கியும், பொசுக்கியும் விட்டது. வரலாறு காணாத அந்தத் துயரச் சம்பவங்களால் இணுவையம் பதியிலுள்ள வழிபாட்டுத் தலங்களெல்லாம் அகதிகள் முகாம்களாக மாறி மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தன. ஆலயங்கள் பல சிதைக்கப்பட்டன. சமயத்தையோ, வழிபாட்டையோ, கல்வியையோ, ஆரோக்கியத்தையோ சிந்திக்க முடியாத நெருக்கடியானதொரு சூழல். 1981 இல் இருந்து 2011 வரை மக்களுடைய வாழ்க்கை மானத்தை, உயிரை, உடைமைகளைக் காக்கும் போராட்ட வாழ்க்கையாக மாறிவிட்டது. தமிழர்கள் தாய் மண்ணை விட்டு வெளியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். எமது அடையாளங்களை இழந்து விடுவோமோ என்று அஞ்சியே வாழ்க்கை கரைந்தது. நல்ல வேளை இணுவிலின் ஞானபரம்பரை இட்ட வித்துக்கள் முற்றாக அழிந்துவிட வில்லை. அந்த வித்துகளில் இருந்து முகிழ்த்த இளம் முத்துக்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள் கடைமை உணர்வு மேலோங்கத் தம்முடைய உணர்வோடு, உயிரோடு, உதிரத்தோடு கலந்துவிட்ட சைவத்தமிழ் மக்களின் வாழ்க்கையின் உயிரோட்டத்தின் அடிச்சுவட்டைக் கண்டறிந்து அதன் வழி செல்ல ஆரம்பித்து விட்டனர். அதன் பயனாக ஆலயங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு ஆன்மீகம் துளிர்க்கத் தொடங்கிவிட்டது. நூல் நிலைங்கள் புத்துயிர் பெற்றுவிட்டன. அறநெறிப்பாடசாலைகள், இளந்தொண்டர் சபைகள் தழைக்கத்தொடங்கிவிட்டன. மீண்டும் இணுவிலிற் சைவமணம் கமழத் தமிழ் ஓங்கி வளரத் தொடங்கியுள்ளது.

யான் பெற்றஇன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே – திருமந்திரம்.

குறிப்பு – வடிவேற்சுவாமிகளின் மருமகனும், சேதுலிங்கச் சட்டம்பியாரின் பெறாமகனும், தனது ஆறாவது வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சமயம், வேதாந்தம், சித்தாந்தம், உபநிடதம் உட்படப் பலவிடயங்களை அவர்களிடம் கற்றவரும், அவர்களுடன் கூட்டுப்பிரார்த்தனைகளிற் கலந்து கொண்டு தனது முப்பதாவது வயதுவரை பிரமச்சரிய ஒழுக்கத்தையும் இறுக்கமாகக் கடைப்பிடித்து வாழ்ந்து அவர்களின் நெறிப்படுத்தலிற் பரமானந்தவல்லியம்மன் ஆலயச்சூழலில் வளர்ந்தவருமாகிய இணுவையூர் பண்டிதர். கா.செ.நடராசாவின் மகளே இக் கட்டுரை ஆசிரியரான திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More