குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கான பாடசாலை வகுப்பறை கட்டடம் மற்றும் அதிபர் விடுதி ஆகியவற்றை ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் இன்று(15) திறந்து வைத்தார். இந் நிகழ்வு பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கல்வி ராஜாங்க அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன்போது கிளிநெச்சி இந்துக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் கட்டடங்களை பாடசாலை பயன்பாட்டிற்கு கையளித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில்,
பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 4 ஆண்டு திட்டத்தில் 70 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 6ஆயிரம் மில்லியன் வடக்குக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் கல்வி வெறுமனே யாழ்ப்பாணம் மாத்திரம் என நாம் எடுத்துக்கொள்ள முடியாது. வன்னியில் உள்ள 3 மாவட்டங்கள் உட்பட கிளிநொச்சியையும் இணைத்து நான்கு மாவட்டமாக யோசிக்க வேண்டும். கிளிநொச்சியின் கல்வி தரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அண்மையில் பிரதம மந்திரி இங்கு வருகை தந்தபோது, விசேட திட்டங்களிற்காக விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக எமது செயலாளர் சென்றுள்ளார். எனவே ஏற்றதாழ்வில்லாது அனைவரும் சமமான கல்வி கற்பதற்கான ற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிடுகையில்,
இலங்கையில் தமிழரசுகட்சி 60வதுகளில் அரசுடன் இணைந்து அமைச்சு பொறுப்புக்களை ஏற்றிருந்தது. ஆனால் அக்கால கட்டத்தில் எதையும் செய்ய முடியாது போனது. அதே போன்று இன்றும் மக்களினுடைய அபிவிருத்தி உள்ளிட்டவற்றை இரண்டு கண்களி்ன் ஒன்றாக பார்க்கின்ற அதேநேரம், நாங்கள் அந்த நிலைக்குள் சென்றால் எங்களுடைய இருப்பு எங்கேயோ மாறிவிடும்.
நாங்கள் இவ்வளவு விட்டுக்கொடுத்து அரசியல்தீர்வு பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே முல்லைத்தீவிலும், திருகோணமலையிலும், வவுனியாவிலும், மன்னாரிலும் எமது காணிகள் பறிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன எனத் தெரிவித்தார்