214
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
யாழ்ப்பாணம் மாகாண கல்வித் திணைக்களகத்தில் பாடசாலை ஊடக கற்கைகள் பாடம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும் அதிகமாக மாணவர்களைப் பயிலச் செய்வதும் அதற்கான சிறந்த கற்றல் கற்பித்தல் சூழலை ஏற்படுத்துவதும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாக காணப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ரகுராம் கலந்துகொண்டு இந்தப் பாடத்தை பயில்வதன் முக்கியத்துவத்தை குறித்து பேசியிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும் பாடத்தை அதிகமான மாணவர்கள் கற்பதாக கூறிய அவர் வடக்கில் இந்தப் பாடத்தை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று குறிப்பிட்டார். தென்னிலங்கையில் இந்தப் பாடத்தை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்றும் தென்னிலங்கையில் உள்ள ஊடக சந்தை அதிகம் காணப்படுவதும் அதற்கொரு காரணம் எனக் கூறினார்.
அத்துடன் தென்னிலங்கை ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் போதிய வேதனத்தை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஊடக மற்றும் ஊடகப் புலத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள்கூட இந்தப் பாடத்தை கற்கத் தயங்குவதாகவும் சுட்டிக்காட்டியிருந்த ரகுராம், சமூக விருத்தியையும் அடிப்படைத் தொடர்பாடல் திறனையும் வளர்த்தெடுக்கும் ஒரு அற்புதமான பாடம் என்றும் கூறியிருந்தார்.
அத்துடன், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஊடகப் பாட ஆசிரியர் கஜீதரன், பாடசாலையில் ஊடக கழகம் ஒன்றை நிறுவுவதன் அவசியம் குறித்து பேசியிருந்தார். ஊடக கழத்தை பாடசாலையில் உருவாக்கி, மாணவர்களின் ஆக்கத் திறனை மேம்படுத்துதல், மற்றும் பாடசாலை மட்டத்தில் ஊடகம் சார்ந்த பணிகள், கவனத்தை ஏற்படுத்துதல் குறித்தும் அவரது பேச்சு அமைந்திருந்தது.
நிறைவில் நன்றியுரை ஆற்றும் பணி எனக்கு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்கத்தின் விஞ்ஞான பீடத்தில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் எதிர்காலத்தில் அந்தப் பூடமே சிங்கள மாணவர்களின் பூடமாக மாறுவதற்கு காரணம், எம்முடைய மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் விகிதாசாரம் குறைந்தமையே. இதே நிலமையே தற்போது ஊடகப் பாடத்திலும் காணப்படுகின்றது. இந்தப் பாடத்திலும் வெகு சிறுபான்மையினரே கல்வி பயில்கின்றனர். எதிர்காலத்தில் ஊடக கற்கைகள் பிரிவுகள், நிலையங்களிலும் இந்த நிலமை ஏற்படலாம்.
ஈழத்தின் முதல் சுதேச பத்திரிகையை தோற்றுவித்தவர்கள் நாங்கள். இலங்கை வானொலி ஊடாக பல்வேறு ஆற்றல் மிக்க தமிழ் வானொலிக் கலைஞர்கள் கவனத்தை ஈர்த்தவர்கள். பல்வேறு ஊடக ஆளுமைகளை சந்தித்த எங்களின் மண்ணில் ஊடகத்தை பயில விரும்பும் மாணவர்கள் அருகி வருவது மிகவும் ஆபத்தானதும் சிந்திக்க வேண்டிய விடயமும் ஆகும். இத்தகைய உரையாடல்கள் அவற்றிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையையும் புதிய தொடக்கத்தையும் ஏற்படுத்துவதாக அமைகின்றது.
வடக்கு மாகணத்தில் ஊடக கற்கைகள் பாடத்தின் இணைப்பாளராக கடமையாற்றும் மாகாண தொழில்நுட்ப பிரிவு கல்விப் பணிப்பாளர் த. லெனின் அறிவழகன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது. இதேவேளை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் 2019இல் பரீட்சை எழுதும் மாணவர்களின் பாட விடயப் புலமையையும் ஊடகம் சார் அறிவையும் அப்பலான தேடலையும் மேம்படுத்தும் நோக்கில் ஊடக மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு ஒன்றை நடத்துவதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகங்களுக்கு நேரடி தரிப்பு ஒன்றையும் மாகாண கல்வித் திணைக்களமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love