தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே, பெரும்பான்மை சமூகத்துடன் நல்லுறவைப் பேணிவரும் அதேவேளை, தமிழ்பேசும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் தங்களது அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
, தமிழ் மொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே ஆரோக்கியமானதொரு அரசியல் நகர்வை முன்கொண்டுசெல்ல முடியும். அண்மைக்காலமாக இரு சிறுபான்மை சமூகங்களுக்கும் இடையில் சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருசிலரினால் மேற்கொள்ளப்படும் இந்த சம்பவங்களுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.
இரு சமூகத்தினரும் மொழியால் இணைந்திருந்தாலும் முஸ்லிம்கள் தனியானதொரு இனக்குழுமம் என்றும் அவர்களுக்கு தனியான கலாசாரம், அரசியல் அபிலாஷைகள் இருப்பதை இந்துக்களும், அதுபோல இந்துக்களுக்கு தனியான கலாசாரம், அரசியல் அபிலாஷைகள் இருப்பதை முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இரு இனக்குழுமங்களுக்கு இடையிலும் எவ்வித குறுக்கீடுகளும் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும்.
இன ஐக்கியத்தை வலியுறுத்தும் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்கள், புனித ரமழான் மாதத்தில் நோன்புகளை நோற்று பெருநாளை கொண்டாடும் இவ்வேளையில் சௌபாக்கியம் நிறைந்த சகவாழ்வை நோக்கிய பயணத்தில் கைகோர்க்கவேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ரமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மானிட வர்க்கத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது. சமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஆன்மீக, சமூகம் சார்ந்த பெறுமதிகள் உலகிற்கு ஒளியூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்னிறுத்தி சகோதர முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் பெருநாளாக அமைய வேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் வவிடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்றாக கருதப்படுகின்ற ஈகைத் திருநாளாகிய ‘ஈத்’ கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற புனித ரம்ழான் மாதத்தில் நோன்பு நோற்று கொண்டிருக்கின்ற அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் இத் தருணத்தில் எனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 கட்டாய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்ட ரம்ழான் நோன்பு கடமைகள் ரம்ழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கப்பட்டு நிறைவேறிய பின்பு இறுதித் திருநாளான ஈகைத்திருநாளில் முஸ்லீம் சகோதர சகோதரிகள் அனைவரும் தமது திருநாளை மகிழ்வுடன் கொண்டாடவும். ஏனைய மதத்தைச் சார்ந்த சகோதர சகோதரிகளுடன் நட்புரிமையுடன் பழகவும் இந்த ஈகைத்திருநாள் சிறப்பு நிகழ்வுகள் வழிசமைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்