ரஸ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி அடுத்த ஜூலை 15 வரை நடைபெறுகின்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியினைக் காண்பதற்காக உலகெங்கிலும் இருந்து பெருந்தொகையான ரசிகர்கள் ரஸ்யா செல்கின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சசு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவித்துள்ளது. விளையாட்டு அரங்கங்கள், ரசிகர்கள் அதிகமாக ஒன்றுகூடும் பகுதிகள், சுற்றுலா இடங்கள், புகையிரத, விமான நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என குறித்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போன்ற சர்வதேச நிகழ்ச்சிகள் தீவிரவாதிகளுக்கு தாக்குதல் நடத்துவதற்கான எளிதான இலக்குகளாக உள்ளன எனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளியிட்டு அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரஸ்யாவில் கால்பந்து போட்டி நடக்கும் மைதானங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன