குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண சபைத் தேர்தலின் போது வீணைச் சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக நானே களமிறங்குவேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈ.பி.டி.பி கட்சியின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழ் மக்களின் நலனுக்காக வடக்கு மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட வேண்டியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள வடக்கு மாகாண சபையினால் தமிழ் மக்களுக்கு தேவையான எதையும் செய்து கொடுக்க முடியவில்லை. இதனால் நான் அடுத்த மாகாண சபைத் தேர்தலின் போது வீணைச் சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளேன்.
அடுத்த வடக்கு மாகாண அரசு ஈ.பி.டி.பியின் ஆட்சியின் கீழ் வந்தால் 3 தொடக்கம் 4 வருடங்களுக்குள் வடக்கில் தேனும் பாலும் ஓடும். இதனால் தமிழ் மக்கள் ஈ.பி.டி.பிக்காக ஆதரவினை அடுத்த வடக்கு மாகாண சபை தேர்தலில் தர வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு அணியாக பிரிந்து நின்று வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர் கொள்ளுமாக இருந்தால் நானே அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் என்று பல பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னிடத்தில் தெரிவித்துள்ளனர் என்றும் டக்ளஸ் தேவானந்தா ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்திருந்தார்.