வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிடும் வகையில் கூட்டமைப்புக்கு சவாலாக மாற்று அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் விக்னேஸ்வரனை தனியாக பிரிந்து செல்ல இடமளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியன, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருட இறுதிக்குள் நடத்தப்படும் என அறிவித்துள்ள நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் அது குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளன.
அதன் அடிப்படையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக மட்டுமே தெரிவித்துள்ள போதும் கூட்டமைப்பிலா அல்லது தனித்தா போட்டியிடுவது என்பது குறித்து தெளிவாக எதனையும் கூறமுடியாது. தொடர்ச்சியாக மௌனம் காத்து வருகின்றார்.
இந்த மௌனத்தையும் கடந்து அண்மைய நாட்களில் தனிக் கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சில நகர்வுகளை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது என வடக்கின் அரசியல் தரப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன.