அர்ஜுன் அலோஸியசின் பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திடமிருந்து பல்வேறு தரப்பினருக்கு, 45 ஆயிரம் தடவைகளில் இலட்சக்கணக்கான பணம் பரிமாறப்பட்டுள்ளதாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனங்களான டபிள்யூ.எம்.மெண்டிஸ் , வோல்ட் அன்ட் ரோ ஆகிய நிறுனங்களின் ஊடாகவே இவ்வாறு பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள், வேறு நபர்களது பெயர்களால் மாற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு பணம் பெற்றுக்கொடுக்கப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல்கள், பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனப் பதிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பலரது பெயர்கள், முதலெழுத்துகளாக மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளதால், உரிய நபர்கள் யாரென்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாகவும் இரகசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த முதலெழுத்துகளுக்குரிய நபர்கள் யாரென்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியால், கடந்த 2016ஆம் ஆண்டு காவல்துறைமா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கமைய, இரகசிய காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போதே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது