குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் காவல்துறையினரின் ;துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன் தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர் என தேவாலயத்தில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவிக்கையில் ,
மல்லாகம் சகாயமாத ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது தேவாலயத்திற்கு வெளியே நின்ற இளைஞர் ஒருவரை வீதியால் வந்த இளைஞர் குழு ஒன்று தாக்க முற்பட்டு உள்ளது. அதனால் குறித்த இளைஞர் தேவாலய வளாகத்தினுள் ஓட முற்பட்ட போது அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவ்வேளை அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் காவல்துறையினர் வந்துள்ளனர்.
காவல்துறையினரை கண்ணுற்ற தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர். அவ்வேளை தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் மீது துப்பாக்கியை காவல்துறையினர் நீட்டிய போது , அதனை கண்ணுற்ற தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் சித்தப்பா (உயிரிழந்த இளைஞர்) குறித்த இளைஞரை கட்டி பிடிக்க முற்பட்ட போது காவல்துறையினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.
நான்கு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞரை தேவாலயத்தில் நின்றவர்கள் மீட்டு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது வழியில் அவர் உயிரிழந்தார்.இளைஞர் உயிரிழந்த செய்தியினை தேவாலயத்தில் நின்றவர்கள் கேள்வியுற்றதும் , காவல்துறையினர் வந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினார்கள். என தெரிவித்தார்.
அதேவேளை மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி சூடு நடாத்திய காவல்துறை உத்தியோகஸ்தர் மது போதையில் நின்றதாகவும் அவ்விடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.அதேவேளை காவல்துறையினர் , வாள் வெட்டுக்குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினை அடுத்தே அவ்விடத்திற்கு வந்ததாகவும் , அதன் போது தம் மீதும் தமது மோட்டார் சைக்கிளில் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த தாகவும் அதனால் தாம் தமது தற்பாதுகாப்புகாகவே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதகாவும் தெரிவித்தனர்.
அதேவேளை அவ்விடத்திற்கு நேரில் சென்று மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் விசாரணைகளை மேற்கொண்டார்.குறித்த பகுதியில் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில் தற்போது அவ்விடத்தில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.