குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் வெற்றிலையுடனும், கோரிக்கை கடிதத்துடனும் நீண்டநேரம் காத்திருந்தும் ஜனாதிபதி சந்திக்காத நிலையில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பரிதாபம் இன்று இடம்பெற்றுள்ளது.
சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி நிகழ்வு இன்று(18) கிளிநொச்சிமத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் ஆயுள் தண்டனை கைதியான ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிக்க நீண்ட நேரம் காத்திருந்த போதும் ஜனாதிபதி அச்சிறுவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். இதனை அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்து ஜனாதிபதி சந்தி்க்க சென்ற சிறுவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.
நீண்டநேரமாக வெற்றிலையுடனும் கோரிக்கை கடிதத்துடனும் காத்திருந்து இரண்டு சிறார்களும் மனமுடைந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியமை பாரத்திருந்தவர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
தாயை இழந்தும் தந்தையை பிரிந்தும் வாழ்ந்து வரும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளான கனிதரனும் சங்கீதாவும் தமது தந்தையை மன்னித்துவிடுவிக்குமாறு கோரும் கடிதத்துடன் ஜனாதிபதியை சந்திப்பதற்கு சிறிலங்கா சுந்திர கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான ஜ.அசோக்குமார் ஏற்பாடு செய்திருந்தார். பிள்ளைகள் இருவரும் தமது அம்மம்மாவுடன் சென்றிருந்தனர். இவருவரும் பல தடவைகள் ஜனாதிபதியை சந்தித்து தங்களது கடிதத்தை வழங்கிவிட முயற்சி செய்த போதும் அது கைகூட வில்லை.
ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் அச் சிறுவர்கள் இருவரையும் அந்த வழியால் வாருங்கள் இந்த வழியால் வாருங்கள் என ஒவ்வொரு பாதையாக காட்டிய போதும் அந்த வழியில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியிடம செல்ல அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் பிரிதொரு அதிகாரியிடம் விடயத்தை கூற அவர் சற்று நேரம் கழித்து வந்து ஜனாதிபதி நிகழ்வு முடிந்து புறப்படும் நேரம் வாகனத்தின் அருகில் சென்று கடிதத்தை வழங்குமாறு தெரிவித்திருந்தார் இறுதியில அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை அவர்கிளிடம் விடயத்தை மன்றாட்டமாக தெரிவித்தும் எவரும் செவிசாக்கவில்லை. இறுதியில் கடிதத்தை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனிடம் வழங்கிவிட்டு சிறுவர்கள் வீடு திரும்பி விட்டனர்.