குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட வங்காலை கிராமத்தின் எல்லைப்பகுதியில் வங்காலை மன்னார் பிரதான வீதியின் அருகில் உள்ள வனப்பிரதேசமான ‘கற்றாலம் பிட்டி’ என அழைக்கப்படும் பிரதேசத்தினுள் இயற்கை வளமான கற்றாழைத் தாவரங்கள் பரந்து காணப்படுகின்றன.
கடந்த மாதம் 14 ஆம் திகதி அன்று இனம் தெரியாத நபர்களால் வெளிப் பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக பிடுங்கப்பட்ட போது பொதுமக்கள் எதிர்ப்பால் குறித்த முயற்சி தடுக்கப்பட்டது.
தற்போது கூட மன்னார் மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வியாபார நோக்கத்திற்காக கற்றாழைச் செடிகள் களவாடப்பட்டு வருகின்றன. இக் கற்றாழைச் செடியானது பல மருத்துவ குணத்தையும் நன்மைகளையும் கொண்டதுடன் இதன் மூலம் பல விலையுயர்ந்த பாவனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதனால் மன்னார் எருக்கலம்பிட்டி சாந்திபுரம் தாராபுரம் போன்ற கிராமங்களில் இருந்து இவ்வாறான செடிகள் மற்றும் வளங்கள் வியாபார நோக்கத்திற்காக பிடுங்கப்பட்டு வெளி பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளிற்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இது ஒரு பகுதியாக இருக்கும் போது தற்போது குறித்த கற்றாழைச் செடிகள் சட்டவிரோதமாக அகழ்ந்த்தெடுக்கப்பட்ட கற்றலாம் பிட்டி பகுதியில் மிச்சமாக இருந்த கற்றாழைச் செடிகளும் அழுகிய நிலையில் மீள்வளர்ச்சி அடைய முடியாத நிலையில் காணப்படுகின்றன.
இவ்வாறு அருகி வரும் வளங்களை அழிந்திடாமல் பாதுகாத்து எம் வருங்கால சந்ததியினருக்கு பயன்பெற இவ்வாறான வளங்களை காத்திடவேண்டும் எனவும் இவ்வாறான தவறுகள் மென்மேலும் இடம் பெறாத வகையில் எம் வளங்களை பாதுகாக்க தயவு செய்து இதற்கு பொறுப்பான அதிகாரிகள் கவனத்திற் கொண்டு கடுமையான சட்டத்தின் மூலம் எம் வளங்களை அழிந்திடாமல் பாதுகாக்க உதவுமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த கற்றாலம் பிட்டி பகுதி கற்றாழைச் செடிகள் வளர்வதற்கு பொருத்தமான இடமாக இருப்பதனால் அப் பிரதேசத்திலே கற்றாழைச் செடிகளை மீள் நடுகை செய்ய உதவி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.