ஜம்மு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் மெகபூபா முப்தி பதவிவிலகியதனையடுத்து அங்கு ஆளுனர் ஆட்சியை அமுல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. எனினும் அண்மைக்காலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக நேற்றையதினம் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மெகபூபா முப்தி உடனடியாக முதல் மந்திரி பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இந்தநிலையில் புதிய அரசு அமையும் சூழ்நிலை இல்லாததால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுனர் ஆட்சியை அமுல்படுத்த அனுமதி கோரி ஜனாதிபதிக்கு ஆளுனர் வோரா பரிந்துரை கடிதம் அனுப்பினார். இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளநிலையில் இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமுலுக்கு வந்துள்ளது.