குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை (20) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதோடு, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள நூற்றிற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் காலை 10.30 மணியளவில் ஓன்று கூடிய அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
கடந்த மாதங்களில் இடம் பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரிளுக்கு இன்னமும் புள்ளிகள் அறிவிக்கப்படாத நிலையில் அரசாங்கத்தினால் அடுத்த கட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த மாதம் மன்னார் மாவட்டத்துக்கு மட்டும் என பிரத்தியோகமாக 86 பட்டதாரிகளை உள்ளடக்கிய பெயர் பட்டியல் ஒன்று அனுப்பப்பட்டிருக்கின்றது. குறித்த பெயர் பட்டியல் தொடர்பாக பொறுப்பான அதிகாரிகள் தங்களுக்கு எந்தவித அறிவித்தல்களும் வழங்கவில்லை எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பெயர் பட்டியல் பட்டதாரிகள் மத்தியில் பாரிய மன உளைச்சளை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள் இவ் விடையம் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தம் ஒன்றை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அரசாங்கம் புள்ளி அடிப்படையில் இல்லாமல் வருடத்தின் அடிப்படையில் நியமனங்கள் வழங்க வேண்டும் எனவும் மன்னார் மாவட்டத்திற்கு மாத்திரம் கடந்த மாதம் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை தொடர்பான உண்மை தன்மையை அறிவதற்கும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபரை சந்திப்பதற்காகவும் குறித்த கலந்துரையாடல் எற்பாடு செய்யப்பட்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் அனைத்து பட்டதாரிகளும் மாவட்ட உதவி அரசாங்க அதிபரை சந்தித்து மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.