கியூபா புரட்சியாளர் சே குவேராவின் படம் பொறித்த மேலங்கி அணிந்திருந்தமைக்காக அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் . அமெரிக்காவின், நியூயோர்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பொய்ண்ட் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த 26 வயதான ஸ்பென்சர் ரபோன் என்பவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த திங்கள்கிழமை, தனது ராணுவ பயிற்சியை முடித்த அவர் மீது , கம்யூனிசத்துக்கு ஆதரவான புகைப்படங்களை பகிர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்த புகைப்படங்களில் அவர் தனது ராணுவ உடைக்குள் அணிந்திருந்த மேலங்கியில் , சே குவேராவின் படம் இடம்பெற்றிருந்தது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட ராணுவ அதிகாரிகள் அவரை ராணுவத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு, வெஸ்ட் பொய்ண்ட் மையத்தில் ராணுவ பயிற்சியை முடித்த ஸ்பென்சர், தனது தொப்பியின் உள்பகுதியில் ‘கம்யூனிசம் வெற்றிபெறும்’ என எழுதி அந்த படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் சிகாகோ நகரில் நடைபெற உள்ள சோசலிசம் 2018 மாநாட்டில் ஸ்பென்சர் ரபோன், உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது