குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று (22) வெள்ளிகிழமை 19 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்; இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகள் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை இடம் பெறுகின்றது. அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வியாழன் மற்றும் இன்று வெள்ளி ஆகிய இரு தினங்களும் குறித்த வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் ‘சதொச’ வளாகத்தில் இருந்து உரிய அனுமதியுடன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அப்புறப்படுத்தபட்டு வருகின்றது. இந்தநிலையில் இன்று இடம் பெற்ற அகழ்வுகளின் போது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு முழு மனித எழும்பு கூடு அகழ்ந்தொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எலும்பு சிறிய தோற்றம் உடைய மனித எச்சமாக காணப்படுகின்ற போதும் அது தொடர்பான உண்மை தன்மையும் மறைவாகவே உள்ளது. தொடர்சியாக ஆங்காங்கே சிறு சிறு மனித எச்சங்கள் காணப்பட்டாலும் இன்று அகழ்தொடுக்கப்பட்ட முழு அளவிலான எலும்பு கூடு மேலும் சந்தோகத்தை ஏற்படுத்தியுள்ளது.