குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை உடைத்து சேதமாக்கி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி சென்றதாக யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாயன்மார் கட்டில் வசிக்கும் சண்முகராஜா என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளது.
அது தொடர்பில் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில் ,
கடந்த சில காலத்திற்கு முன்னர் யாழ்.பல்கலைகழகதத்தின் முன்பாக எமது மகன் கடையொன்றினை நடத்தி வந்தார். அக் கடை இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.அதனை அடுத்து எமது மகன் வெளிநாட்டில் சென்று தற்போது அங்கு வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பாக எமது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரு நபர்கள் எமது மகன் லோஜன் வெளிநாட்டால் வந்துவிட்டாரா ? எப்ப வருவார் ? என மிரட்டும் பாணியில் எம்மை விசாரித்து சென்று இருந்தனர்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு எமது வீட்டுக்குள் புகுந்த கும்பல் எமது வீட்டு யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை அடித்து உடைத்து எம்மை அச்சுறுத்தி சென்றனர்.
அது தொடர்பில் நாம் காவல்துறை அவரச சேவை பிரிவுக்கு தொலைபேசி ஊடாக அறிவித்திருந்தோம். இன்று வெள்ளிகிழமை காலை எமது வீட்டுக்கு வந்த யாழ்ப்பாண காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு எமது வாக்கு மூலங்களை பதிவு செய்து சென்றனர் என தெரிவித்தார்.