சக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவத் தலைவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை அந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டப்ளியூ. கே. விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 15ம் திகதி இரவு இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்ட பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த இந்த மாணவன் மீது அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்றால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மாணவன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சத்திரசிகிச்சை ஒன்றின் பின்னர் வீடு திரும்பிய மாணவனின் நிலை மீண்டும் மோசமடைந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் 11ல் கல்வி பயிலும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மாணவன் மீது தாக்குதல் நடத்திய 15 வயதுடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர், இரண்டு மாணவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபராக கருதப்படும் மாணவன் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். சிலாபம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.