Home இலங்கை  ஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..

 ஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..

by admin

தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்த ஊடகர் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் நடந்த உயர்மட்டச் சந்திப்புப் பற்றிய செய்தி அறிக்கை தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் அமைதியாக உள்ளார்கள்.

இலங்கையை விட்டு வெளியேறிய லங்கா ஈ நியூசின் பத்திரிகை ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவைக் கைது செய்யுமாறு அல்லது நாடு கடத்துமாறு உயர் ஆணையாளர் ஜேம்ஸ் டௌரிசிடம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் “சண்டே ரைம்ஸ்” பத்திரிகை செய்தியிட்டுள்ளது.

ஜனாதிபதியை அவமதிக்கும் தொடர்ச்சியான கட்டுரைகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த இணையத்தளம் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இரண்டு உயர் அதிகாரிகளின் முன்னிலையில் உயர் ஆணையாளர் டௌரிசிடம் இந்த வேண்டுகோளை ஜனாதிபதி சிறிசேனா விடுத்துள்ளார்.

“கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சிரால் லக்திலக மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கபிலா வைத்யரட்ன ஆகியோர் இருந்தனர்” என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகர்கள் (JDS) பதிலளிக்குமாறு பல தடவைகள் விடுத்துள்ள வேண்டுகோளை பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அதன் உயர் ஆணையகம் நிராகரித்துள்ளது அல்லது புறக்கணிக்கின்றன.

வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் (FCO) ராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஆணையகம் (BHC) ஆகியோரிடம் யூன் 10 அம் தேதி சண்டே ரைம்சில் வெளியான இந்தச் செய்திக்கான பதிலை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகர்கள் (JDS) கோரியுள்ளனர்.

பிரதீப் சந்தருவன் சேனாதீரவை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன எனப் பிரித்தானிய அதிகாரிகள் திருப்தியாக நினைக்கின்றார்களா? எனக் கேட்டு 11 ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டது.

அது குறித்து தமது சொந்தக் கருத்தை வழங்குவதற்குப் பதிலாக, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஆணையகத்தின் (BHC) தொடர்பாடல் மேலாளர் இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) விடுத்த மறுப்பு அறிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அந்தச் செய்தி தவறாகச் செய்தியிடப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தின் ஆசிரியரையோ அல்லது வேறு எவரையுமோ கைது செய்யவோ அல்லது நாடு திருப்பவோ எந்த வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை” என இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் மறுப்புக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து, சிறிசேனாவுக்கும் டௌரிசிற்குமிடையிலான சர்ச்சைக்குரிய கலந்துரையாடல் தொடர்பாக மேலும் தகவல்களை இணைத்துத் தமது செய்தியறிக்கையின் உண்மைத்தன்மையை மீள உறுதிப்படுத்தி யூன் 11 ஆம் தேதி சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டது.

தமது வேண்டுகோளிற்கு உறுதி சேர்க்குமாறு ஆவணங்களை ஜனாதிபதி அலுவலகம் எப்படி வழங்கியது என்பது தொடட்ர்பிலும் இந்த ஆங்கில வாரப்பத்திரிகை செய்தியிட்டுள்ளது.

“லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியாகிய சிங்களத்திலுள்ள மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை ஜனாதிபதியின் அலுவலகர்கள் உயர் ஆணையர் டௌரிசிடம் கையளித்தனர்” என அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

வெளியாகிய புதிய தகவல்கள் தொடர்பிலும் கவனத்தை ஈர்க்கும் முகமாக அவர்கள் பக்கத்துக் கருத்தைச் சொல்லுமாறு சந்தர்ப்பத்தை வழங்கி இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகர்கள் (JDS) கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஆணையகத்திற்கு கடிதமும் அதன் ஒரு நகலை வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கும் (FCO) அனுப்பி வைத்தனர்.

இருந்தபோதும், பிரித்தானிய அதிகாரிகள் எந்தப் பதிலையும் இதுவரை வழங்கவில்லை.

ஜனாதிபதியின் அலுவலக உத்தரவின் பேரில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRC) லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தை இலங்கையில் தடைசெய்துள்ளதாக Groundviews என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.

By Athula Vithanage © JDS

தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More