பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்கிற அச்சம், நாட்டிலுள்ள சில அரசியல் வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும் ஒன்றிணைந்த எதிரணியினரின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த, அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், ஹிட்லரை போன்ற சர்வாதிகார நடத்தியேனும், நாட்டை சரியான பாதைக்கு இட்டுச்செல்லுமாறு கோத்தபாயவுக்கு ஆசி வழங்கியிருந்தார். இக்கருத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ இக்கருத்து தொடர்பில சிங்களமொழி ஊடகம் ஒன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அதிகமான விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தபோதிலும், ஹிட்லர் ஆட்சிப் பற்றி பேசியிருந்தமை மாத்திரம் பேசப்பட்டு வருகின்றது.” என கூறியுள்ளார்.
ஹிட்லர் போன்று உறுதியான தீர்மானம் எடுக்க கூடிய தலைவர் நாட்டுக்குத் தேவை என்றே அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் வெண்டருவே தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.