சென்னையில் போலிக் கடவுச்சீட்டு தயாரித்த 3 இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 92 போலிக் கடவுச்சீட்டுக்கள் மற்றும் கடவுச்சீட்டுத் தயாரிக்கும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, மத்திய குற்றப்பிரிவின், போலிக் கடவுச்சீட்டு தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் டிராவல்ஸ் உரிமையாளர் பெருங்குடியைச் சேர்ந்த வீரகுமார்(47) அவரது தம்பி எழும்பூரில் வசிக்கும் பாலு (எ) பாலசுப்ரமணியன்(45) கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் ஷெனாய் நகரைச்சேர்ந்த கார்த்திக்கேயன்(40) செங்குன்றத்தை சேர்ந்த சரவணன்(43) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணகளின் போது தமிழ்நாட்டிலுள்ள பயனற்ற கடவுச்சீட்டுக்களை விலைக்கு வாங்கி, அதிலுள்ள நபரின் புகைப்படத்திற்கு பதிலாக, அவர்களுக்கு தேவைப்படும் இலங்கை தமிழர்களின் புகைப்படத்தை பொருத்தி, இந்திய போலிக் கடவுச்சீட்டுக்களின் பெயரில் இலங்கை தமிழர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில், போலி பாஸ்போர்ட் கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (50) அமைந்தகரை, மேத்தா நகரைச்சேர்ந்த உமர் உசைன்(47), கோடம்பாக்கத்தை சேர்ந்த அம்ஜத்குமார்(36), தி.நகரைச் சேர்ந்த சக்திவேலு (47), இலங்கை தமிழர்களான கோடம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (40), சாலிகிராமத்தை சேர்ந்த குணாளன்(48), அய்யப்பந்தாங்கலை சேர்ந்த கிருஷ்ணமூத்தி(47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து போலி 80- இந்திய போலிக் கடவுச்சீட்டுக்கள், 1- போலி இலங்கை கடவுச்சீட்டுக்கள் போலிக் கடவுச்சீட்டு தயாரிக்க பயன்படுத்திய மடிக்கணிணி, ஹாட் டிஸ்க், ஸ்கான் இயந்திரம் , பிரிண்டர் மற்றும் போலி முத்திரைகள், போலி இந்தியன் விசா மற்றும் 85,000 ரூபா ரொக்கப் பணம் Nகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் நேற்றையினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.