பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பகிர்ந்துகொள்வதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் டுவிட்டரில் ‘மீ ரூ’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. ஹொலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வே வின்ஸ்டீன் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியானதையடுத்து, ஹொலிவுட் நடிகை அலிசா மிலானோ இந்த பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.
‘மீ ரூ’ தலைப்பின் கீழ் பல்வேறு பிரபலங்கள் தங்கள் அனுபவங்கள், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பதிவு செய்த நிலையில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து உலகளாவிய வல்லுநர்கள் கொண்ட குழு கருத்துக்கணிப்பு நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்படடுள்ளன. இதில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிரியாவும் அமெரிக்காவும் மூன்றாமிடத்தில் உள்ளன. சோமாலியா, சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கும், பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை சமாளிப்பதற்கும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுவதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்